தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு ஒருவாரத்தில் உரிய தீர்வு

தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு ஒருவாரத்தில் உரிய தீர்வு-M-Thilakaraj-Aravindakumar-Naveen-Dissanayake-Mahindananda

ஒரு வார காலத்தினுள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க இருப்பதாக தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் மயில்வாகனம் திலகராஜ் எம்.பி முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் பதிலளித்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தோட்டங்களை பாதுகாத்தே சகல நடவடிக்கைகளும் எடுக்க ​வேண்டும். பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

கடந்த மூன்றரை வருடத்தில் தோட்ட வீடுகள் நிர்மாணிக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டது. தோட்டக் கம்பனிகளுடன் பேசி 1,000ரூபாவுக்கு மேல் வருமானம் கிடைக்கும் வகையில் திட்டமொன்றை கட்டாயம் முன்னெடுக்க இருக்கிறேன்.

ஒரு வார காலத்தினுள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்றுமதி வருமானம் 39வீதத்தினால் உயர்ந்துள்ளது.

அதனை மேலும் அதிகரிக்க இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மயில்வாகனம் திலகராஜ் எம்.பி

கடந்த செப்டம்பர் முதல் சம்பள உயர்வு கோரி பரவலாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதோரும் போராட்டம் செய்கின்றனர்.

இந்தப் பிரச்சினை தொழிற்சங்க பிரச்சினையாக மட்டுமன்றி சமூக பிரச்சினையாகவும் மாறியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தொழில் அமைச்சு தலையீடு செய்ய வேண்டும்.தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட கம்பனிகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்.

2018ஒக்டோபரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவடைந்தது. 1,000ரூபா சம்பளம் பெற்றுக் கொடுப்பதாக தொழிற்சங்கங்கள் வழங்கிய வாக்குறுதி அரசியல் கோரிக்கையாக மாறியுள்ளது.

ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு வீதங்களில் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது.1,000ரூபா சம்பள அதிகரிப்பு தொழிலாளர் தரப்பில் நியாயமாக இருந்தாலும் திடீரென அதிகரிப்பது நியாயமற்றது என வாதம் முன்வைக்கப்படுகிறது. நிலையான வீதத்தில் சம்பள அதிகரிப்பு வேண்டும்.

அரவிந்த குமார் எம்.பி

2வருடங்களுக்கு ஒருமுறை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் தொடர்ந்து இது பின்போடப்படுவதால் 2,3ஒப்பந்தங்கள் தவறவிடப்பட்டுள்ளன.

இதனால் 800கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை தோட்டத் தொழிலாளர்கள் இழந்துள்ளனர்.தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தால் அவர்களின் சாபத்திற்கு உள்ளாக நேரிடும். பிச்சைக்காரர்கள் கூட நாளாந்தம் 2,500ரூபாவரை பெறுகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 500ரூபா தான் கிடைக்கிறது. 

அமைச்சர் நவீன் திசானாயக்க

 

கடந்த அரசியல் நெருக்கடி நிலை காரணமாக ஒருமாத காலத்திற்கு மேல் சம்பள பேச்சுக்கள் தடைப்பட்டன. ஆனால் மீள பேச்சுக்களை ஆரம்பிக்க முடிந்துள்ளது.

நான் ஆறுமுகன் தொண்டமானுடனும் பேசினேன். தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கும் அதேவேளை தோட்ட கம்பனிகளையும் வீழ்ச்சியடையச் செய்ய முடியாது.

இந்த பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டும்.

ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்குவது கஷ்டமான விடயமாகும். தொழிற்சங்கங்கள் வெ ளிப்படையாக இந்த ​கோரிக்கையை முன்வைத்தாலும் அது இயலாதது என அவர்களுக்கு தெரியும்.

அடிப்படை சம்பளம், வருகை கொடுப்பனவு, உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு உட்பட 940ரூபா கிடைக்கிறது.

கொடுப்பனவுகளை அதிகரிக்க கம்பனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

1000ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க கம்பனிகளுக்கு அழுத்தம் வழங்கினால் அவை வீழ்ச்சியடையும்.

மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி

சகல தரப்பினரும் இணைந்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 630ரூபா மட்டும் தான் தற்பொழுது கிடைக்கிறது.

20நாட்கள் வேலை செய்தால் 12,600ரூபா தான் கிடைக்கிறது.இந்த சம்பளம் எப்படி போதுமாகும்.

அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்க முடியும் என்றால் ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்பட்ட போது 700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க தொழிற்சங்கங்கள் உடன்பட்டிருந்தன என்றும் தெரிவித்தார்.  

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

Thu, 01/10/2019 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை