கபோனில் இராணுவ சதிப்புரட்சி

ஐம்பது ஆண்டுகளாக குடும்ப ஆட்சி நிகழும் எண்ணெய் வளம் கொண்ட கபோன் நாட்டின் கனிஷ்ட அதிகாரிகளால் இராணுவ சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

“ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவர” இராணுவ சதிப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக படையினர் அறிவித்துள்ளனர். இந்தப் படையினர் நேற்று தேசிய வானோலி நிலையத்தை கைப்பற்றி சுருக்கமான அறிவிப்பு ஒன்றை வாசித்துள்ளனர். இதில் “தேசிய மறுசீரமைப்பு கெளன்ஸில்” ஒன்று நிறுவப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தலைநகர் லிப்ரவில்லே வீதிகளில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் நிலைகொண்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு தனது தந்தை ஒமர் பெங்கோவின் மரணத்தைத் தொடர்ந்து அலி பொங்கோ மேற்கு ஆபிரிக்க நாடான கபோனின் ஜனாதிபதியாக தெரிவானார். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டும் இடம்பெற்ற தேர்தலில் அவர் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு வன்முறைகள் கொண்ட அந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த ஒக்டோபர் மாதம் பக்கவாதம் தாக்கியதை அடுத்து பொங்கோ இரண்டு மாதங்களாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பதோடு அவர் மொரோக்கோவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது உடல்நிலை குறித்து நீடித்த வதந்திகளுக்கு முடிவுகட்டும் வகையில் பொங்கோ தொலைக்கட்சி ஒன்றில் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு, தான் நல்ல நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

எனினும் அந்த செய்தி குறித்து அதிருப்தி வெளியிட்ட படையினர், அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சி என்று குறிப்பிட்டனர்.

“குடியரசின் ஜனாதிபதியாக அவரது பொறுப்பை முன்னெடுக்கும் திறன் குறித்து வலுவான சந்தேகம் உள்ளது” என்று கபோன் பாதுகாப்பு படைகளின் நாட்டுப்பற்று இயக்கம் என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஒன்டு ஒபியங் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் தமது எதிர்காலத்தை பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் குறிப்பாக அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சதிப்புரட்சி படையினர் போக்குவரத்து அமைப்பு, வெடிபொருள் கையிருப்பு மற்றும் விமானநிலையங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். எனினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அரசு பின்னர் அறிவித்துள்ளது. இந்த சதிப்புரட்சியில் ஈடுபட்ட நால்வரை கைது செய்ததாகவும் ஐந்தாமவர் தப்பி ஓடியதாகவும் அரச பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tue, 01/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை