நாட்டில் இருந்து தப்பிய சவூதி பெண் பாங்கொக்கில் நிர்க்கதி

பாங்கொக் விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சவூதி அரேபிய பெண் ஒருவர் தான் திருப்பி அனுப்பப்பட்டால் கொலை செய்யப்படக்கூடும் என முறையிட்டுள்ளார்.

தனது குடும்பத்தினர் தம்மை உடல் மற்றும் உளரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவதாக 18 வயதான ரஹாப் முஹமது அல்குனூன் என்ற அந்த யுவதி குறிப்பிட்டுள்ளார்.

தனது குடும்பத்தினருடன் குவைட்டுக்கு விடுமுறைக்கு சென்றபோதே இரண்டு நாட்களுக்கு முன் அவர்களிடம் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் பாங்கொக்கில் இருந்து அவுஸ்திரேலியா பயணிக்க முயன்றுள்ளார்.

தான் இஸ்லாத்தை துறந்ததாக பி.பி.சி தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருக்கும் அந்த யுவதி, தாம் வலுக்கட்டாயமாக சவூதிக்கு திருப்பி அனுப்பப்பட்டால் தனது குடும்பத்தினர் தம்மை கொன்றுவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவரிடம் திரும்பிச் செல்வதற்கான பயணச் சீட்டு இல்லாததாலேயே பாங்கொக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள சவூதி தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் இருக்கும் குவைட்டுக்கு அவர் நாடுகடத்தப்படவுள்ளார் என்றும் அது கூறியுள்ளது.

தன்னிடம் அவுஸ்திரேலிய விசா இருப்பதாக கூறிய அல்குனூன் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தை பிடிக்க முயன்றபோது தன்னைச் சந்தித்த சவூதி அதிகாரி தனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் நாடுகடத்தப்படக் கூடாது என மனித உரிமை கண்காணிப்புக் குழு அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் அந்த யுவதி பாங்கொக் விமானநிலையத்தில் உள்ள தனது ஹோட்டல் அறையில் பாதுகாப்பு தடையுடன் தங்கியுள்ளார். அதிகாரிகள் அவரது ஹோட்டல் அறைக்கு வெளியில் காத்துள்ளனர்.

குவைட் நகரை நோக்கி பயணிக்கும் விமானத்தில் ஏற அவர் மறுத்து வருகிறார்.

Tue, 01/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை