சீன விண்கலம் நிலவின் மறு பக்கம் தரையிறக்கம்

வரலாற்றின் முதல் முயற்சியாக நிலவின் மறுபக்கத்தில் சீனாவின் விண்கலம் ஒன்று நேற்று தரையிறங்கியதை அந்நாட்டு விண்வெளி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட சாங் இ–4 என்ற அந்த ஆய்வு இயந்திரம் இலங்கை நேரப்படி காலை 8 மணி அளவில் மெதுவாக தரையிறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலவின் மறுபக்கத்தின் முதலாவது தரைமட்டத்திலாக வர்ண புகைப்படத்தையும் அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நிலாவின் மறு பக்கத்திற்கு சென்றதும் விண்கலத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்படும். எனவே, நிலவுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்தச் செயற்கைக்கோள் சாங் இ–4 விண்கலத்தின் சமிப்ஞையை பூமிக்கு அனுப்பிவைக்கும்.

நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஐட்கென் படுகையிலேயே இந்த விண்கலம் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலவின் தற்சுழற்சியும் பூமியை சுற்றிவரும் வேகமும் ஒத்திசைவாக இருப்பதால் நிலவு தனது ஒரு பக்கத்தை மட்டுமே பூமிக்கு வெளிப்படுத்துகிறது. புவியின் சுழற்சியும் நிலவின் சுழற்சியும் ‘ஒத்த சுழற்சிப்பிணைப்பு’ என்ற வகையில் அமைந்திருப்பதே இதற்கு காரணமாகும். இதனால் நிலவின் மறு பக்கம் அல்லது தொலைதூர பகுதி எமக்கு தெரிவதில்லை.

இந்த தொலைதூர பகுதிக்கு முன்னர் விண்கலங்கள் சென்றபோதும் அதில் எதுவும் தரையிறங்கவில்லை.

இந்த தரையிறக்கம் நிலையின் தொலைதூர பகுதியின் மர்மத் திரையை விலக்குவது என்று குறிப்பிட்டிருக்கும் சீன விண்வெளி நிறுவனம், மனிதனின் நிலவு ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டது. நிலவின் பள்ளத்தாக்கின் அகலக் கோண புகைப்படம் ஒன்றையும் அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே, சாங் இ –4 விண்கலம் தரையிறங்குவதற்காக தமது சுற்றுப்பாதையை நிலவை நோக்கி தாழ்த்திவந்தது.

கடந்தவார இறுதியில் இந்த விண்கலம் நிலவை நெருங்கி நீள் வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பித்ததாகவும், அந்நிலையில் நிலவின் தரைப் பகுதிக்கும் விண்கலத்துக்குமான குறைந்தபட்ச தொலைவு வெறும் 15 கிலோ மீற்றராக இருந்ததாகவும் சீன ஊடகம் தெரிவித்தது.

எனினும் நிலவின் தொலைதூரப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவது என்ற முடிவு, இந்தப் பயணத்தை மிகுந்த சிக்கலும், ஆபத்தும் நிறைந்ததாக மாற்றியது. இதற்கு முன் நிலவை நோக்கி சீனா அனுப்பிய சாங் இ–3 விண்கலம் 2013ஆம் ஆண்டு நிலவின் மேர் இம்பிரியம் பகுதியில் தரையிறங்கியது. அந்த விண்கலம் எதிர்கொண்டதைவிட தற்போதைய விண்கலப் பயணம் அதிக ஆபத்தை எதிர்கொண்டது.

இந்த விண்லம் தரையிறங்கி இருக்கும் வட்டாரத்தின் மண்ணியல் வகையை ஆராய்வதற்கும், உயிரியல் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கும் தேவையான கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன.

குறிப்பாக பூமியின் வானொலி சத்தங்களில் இருந்து தடுக்கப்பட்டிருக்கும் நிலவின் மறுபக்கம் வானொலி அதிர்வெண் வானியல் ஆராய்ச்சிக்கு தகுந்த இடம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்தக் கோட்பாட்டை பரீட்சித்துப் பார்ப்பதற்கு இந்த விண்கலத்தில் நிறமாலைமானி கருவியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்படி வானொலி அலைகளை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த விண்கலம் மேற்கொள்ளும்.

இந்த விண்கலத்தில் உருளைக்கிழங்கு, அரபிடொப்சிஸ் தாவர விதைகள் அதேபோன்று பட்டுப்புழு முட்டை கொண்ட கொள்கலன் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அங்கு உயிரியல் சோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுக்க முயற்சிக்கும் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இந்த முயற்சி ஒரு மைல்கல்லாக உள்ளது.

இதன்படி நிலவுக்கு மனிதனை அனுப்பும் அறிவிப்பை கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட சீனா, சொந்தமான விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது. இந்த விண்வெளி நிலையம் 2022 ஆம் ஆண்டு இயங்கவுள்ளது. சீனாவின் இந்த சமீபத்திய நிலவுப் பயணம் மூலம் நிலவின் பாறை மற்றும் தூசி மாதிரிகளை சீனா புவிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

எனினும் சீன விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றி சந்தேகங்கள் வெளியிடும் அமெரிக்கா, அந்த ஆராய்ச்சிகளில் நாசா கூட்டுச் சேர்வதற்கு அமெரிக்க பாராளுமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை