போதைப்பொருள் ஒழிப்புக்கு தொழிநுட்ப அறிவை வழங்க சிங்கப்பூர் இணக்கம்

போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் திறன் மற்றும் தொழிநுட்ப அறிவை இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அறிமுகப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சமூக,குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தேசிய அபிவிருத்தி பிரதியமைச்சருமான டெஸ்மன் லீ (Dasmond Lee) உள்ளிட்ட அந்நாட்டின் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (24) முற்பகல் மெண்டரின் ஓரியன்டல் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பிற்கு உதவுமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பிற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கு சிங்கப்பூர் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விசேட பிரதிநிதிகள் சிலர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

சிங்கப்பூர் அரசாங்கம் போதைப்பொருள் சுற்றிவளைப்பு தொடர்பில் பின்பற்றுகின்ற நடைமுறைகள் குறித்தும் சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் ஜனாதிபதிக்கு அந்நாட்டு அதிகாரிகள் விளக்கமளித்ததுடன்,போதைப்பொருள் ஒழிப்பிற்காக அந்நாட்டின் அமைச்சுக்கள் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்திவரும் நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் போதைப்பொருள் பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்திவரும் நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,போதைப்பொருள் ஒழிப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பொலிஸ் அதிகாரிகளை பாராட்டி அவர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் சமூக,குடும்ப மேம்பாட்டுத் துறை அமைச்சரும் தேசிய அபிவிருத்தி பிரதியமைச்சருமான டெஸ்மன் லீ,உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புத் துறை சிரேஷ்ட பணிப்பாளர் லிங் யங்க் ஏர்ன்,மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பதில் கடமை புரியும் பணிப்பாளர் செபஸ்டியன் டேன்,மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தொடர்பாடல் துறை பணிப்பாளர் சென்ங் சேர்ன் ஹோங்ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Thu, 01/24/2019 - 13:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை