அட்டாளைச்சேனை சோபர் அணி சம்பியன்

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

திருக்கோவில் யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய அம்பாறை மாவட்டக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பினாக தெரிவாகியது.

அணிக்கு 7பேர் 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள 50 முன்னணிக்கழகங்கள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டி ஒருநாள் போட்டியாக திருக்கோவில் பிரதேசத்திலுள்ள நான்கு மைதானங்களில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியானது திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் சம்மாந்துறை நியுசன் விளையாட்டுக் கழகத்திற்கும், அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சோபர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட நியுசன் அணியினரை கேட்டுக்கொண்டதற்கமைவாக 5 ஓவர் நிறைவில் 5 விக்கெட்களையும் இழந்து 43 ஓட்டங்களை நியுசன் அணியினர் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு வெற்றி பெறத்துடுப்பெடுத்தாடிய சோபர் அணியினர் 3.2 ஓவர் நிறைவில் 3 விக்கட்களை இழந்து 44 ஓட்டங்களை பெற்று 4 விக்கட்களினால் இச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாகினர்.

இதில் இரண்டாமிடத்தினை நியுசன் அணியினர் தனதாக்கிக் கொண்டனர். இறுதிப்போட்டியில் சிறந்த வீரராக சோபர் அணியின் கே.எம்.அக்ரமும் சுற்றுப்போட்டியின் தொடர்நாயகனாக நியுசன் அணியின் எம். சாக்கீரும் தெரிவு செய்யப்பட்டு அதிதியினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியனான சோபர் அணியின் தலைவர் எஸ்.எம்.முபாரிஸிடம் வெற்றிக்கிண்ணத்தினையும் 25 ஆயிரம் ரூபாப் காசோலையும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இரண்டாம் இடம்பெற்ற நியுசன் அணித்தலைவர் எம்.சக்கீரிடம் கிண்ணத்துடன் 15 ஆயிரம் ரூபா காசோலையும் இதன்போது அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகத்தின் பதவிவழி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் அதிதிகளாகக் கலந்து கொண்டு பரில்களை வழங்கி வைத்தனர்.

Wed, 01/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை