பாரிய மோசடிகள் தொடர்பில் ஆராய விசேட மேல் நீதிமன்றங்கள்

பாரிய மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கு உத்தேசிக்கப்பட்ட மூன்று விசேட மேல் நீதிமன்றங்களும் விரைவில் அமைக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித்.பி.பெரேரா பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியில் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமித்திருப்பதை வரவேற்கின்றோம். அதேநேரம், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள்  குறித்து விசாரணை நடத்திய பாரிய மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளுக்கு அமைய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி சம்பந்தப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்க விசேட மேல் நீதிமன்றங்கள் மூன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதில் ஒரு நீதிமன்றம் மாத்திரமே தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நீதிமன்றங்களையும் விரைவில் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இரண்டாவது நீதிமன்றத்துக்கான மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளபோதும், நீதிமன்றத்தை அமைப்பதற்கான பௌதீக வசதிகள் இன்மையால் அதனை நடைமுறைப்படுத்த முடியாதிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில் ஏற்கனவே திட்டமிட்டதைப் போன்று மூன்று விசேட மேல்நீதிமன்றங்களையும் விரைவில் அமைத்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

அது மாத்திரமன்றி கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, 32 விசாரணை அறிக்கைகளை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. இதில் ஐந்து மோசடிகள் தொடர்பிலேயே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் ஜனாதிபதிக்கு உள்ளது. வெறுமனே விசாரணை அறிக்கைகளை தனக்குப் பக்கத்தில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை.

திறைசேரிமுறி மோசடி குறித்தும் விசாரணைகள் நடத்தப் பட்டுள்ளபோதும் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. இவை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மாஅதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குள்ளது. எனவே நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பது அவசியமானதாகுமென்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Wed, 01/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை