பயிற்சிப் போட்டியில் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறியது இலங்கை அணி

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் பெற தவறியுள்ளனர்.

ஹோபார்டில் நடைபெற்றுவரும் இந்த பயிற்சிப் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணியின் ஆரம்ப வரிசை வீரர்கள் எவரும் அரைச் சதம் கூட பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிவந்த திமுத் கருணாரத்ன 92 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 44 ஓட்டங்களை பெற்ற நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதேபோன்று அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஆரம்ப வீரராக வந்த திசர பெரேரா தலா 32 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர்.

இளம் பீரர் சதீர சமரவிக்ரம 11 ஓட்டங்களை பெற்றதோடு தனஞ்சய டி சில்வா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் மத்திய வரிசையில் ரொஷேன் சில்வா ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன்படி இலங்கை அணி 75 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. முன்னதாக தனது முதல் இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸி. பதினொருவர் அணி ஆட்டநேர முடிவின்போது 2 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை பெற்றுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த சமீர மற்றும் கசுன் ராஜித்த தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிக் கோட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. அவுஸ்ரேலியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காகவே இலங்கை அணி அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை பிரிஸ்பானில் ஆரம்பமாகவுள்ளது.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை