அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது

பாராளுமன்றம் நாளை (11) அரசியலமைப்பு சபையாக கூடுகிறது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெற்ற விசேட கட்சித் தலைவர் கூட்டத்திலும் அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவினதும் கூட்டங்களில் இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

நாளை (11) காலை 10.00மணி முதல் பிற்பகல் 12.30வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் மாத்திரம் உரையாற்ற இணக்கம் காணப்பட்டுள்ளது.  

விசேட கட்சித் தலைவர்கள்கூட்டம் நேற்று பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெற்றது.

இதில் புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.   புதிய அரசியலமைப்பு தொடர்பில் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் முன்வைத்துள்ள யோசனைகள் மற்றும் கருத்துகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட இருக்கிறது.  

உத்தேச அரசியலமைப்பு தொடர்பான சில அறிக்கைகளும் இதன் போது சமர்ப்பிக்கப்படவிருப்பதாக அறிய வருகிறது. 

 விஷேட கட்சித் தலைவர் கூட்டத்தின் பின்னர் அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுக்கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா எம்.பி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அறிய வருகிறது. ஒருமித்த நாடு என்றால் அதன் பதத்தை தமிழில் எழுதலாம், ஒற்றையாட்சி என சிங்களத்தில் எழுதப்பட்டால் தமிழிலும் அதற்கான சரியான பதத்தையே எழுத வேண்டும் என டக்ளஸ் தேவானந்த எம்.பி கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள சுமந்திரன் எம்.பி. வெள்ளிக்கிழமை விவாதத்தில் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்குமாறும் இப்போது அவசியமில்லை எனவும் அவர் கூறியதாக அறிய வருகிறது.  

நாளைய விவாதத்தின் போது வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. 

இதேவேளை பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூட இருக்கிறது.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)  

Thu, 01/10/2019 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை