மக்களுக்கான அபிவிருத்தியே அரசின் இலக்கு

கடந்த அரசாங்கம் முன்னுரிமையில்லாத பெறுமதியில்லாத அபிவிருத்திகளையே முன்னெடுத்தது. ஆனால் எமது அரசாங்கம் மக்களுக்கு அவசியமானஅபிவிருத்திகளையே மேற்கொள்கின்றது. எனினும் இதற்கான பிரசாரங்கள் கிடைக்கப் பெறாதது துரதிஸ்டவசமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடமொன்றை இரத்தினபுரி பட்டுஹேன மலங்கம பகுதியில் நேற்று முன்தினம் (17) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவரீதியாக திறந்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரத்தினபுரி சமன் தேவாலயத்திற்கு சென்று இறைவழிபாட்டிலீடுபட்டார். அதன் பின்னர். இரத்தினபுரியிலுள்ள மாகாண பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் வகையில் வைபவம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் இந்த மருத்துவ பீடத்தை வைபவரீதியாக திறந்து வைத்தார்.

பிரதமர் அங்கு மேலும் கூறியதாவது.

நாட்டில் யுத்தம் ஏற்பட்டபோது அதற்கு கூடுதலான நிதி செலவு செய்யப்பட்டது. யுத்தம் முடிவடைந்தப் பின்னர் அப்போதைய அரசாங்கம் நாட்டுக்கு தேவையான எவ்விதமான அபிவிருத்திப்பணிகளையும் செய்யவில்லை. மக்களுக்கு தேவைப்படாத முன்னுரிமையற்ற அபிவிருத்தி திட்டங்களே முன்னெடுக்கப்பட்டன. கடந்த காலத்தில் தென்பகுதியில் அமைக்கப்பட்ட துறைமுகங்கள், விமானநிலையங்கள் தற்போது பெறுமதி வாய்ந்ததாக மாறியுள்ளன. இவை அமைக்கப்பட்டவுடன் பாரிய நிதிப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. தற்போது இவை இலாபம் பெறும் நிறுவனங்களாக மாறுகின்றன. இதற்கு காரணம் எமது அரசாங்கத்தினால் ஹம்பாந்தோட்டையில் 100 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையாகும்.

தற்போது நாம் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்துவருகின்றோம். சப்ரகமுவ மருத்துவபீடம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து பல பட்டதாரிகள் வெளியேறுவார்கள் இவர்களுக்குதொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் பாரியபொறுப்பும் எமக்குள்ளது.

நாம் மிககுறுகிய காலத்தில் 690 பில்லியன் ரூபாவை மருத்துவத் துறைக்கும் 635 பில்லியன் ரூபாவை கல்விக்காகவும் ஒதுக்கினோம். மொத்தமாக 1,300 பில்லியன் ரூபாவுக்கு மேல் செலவு செய்யப்படுகின்றன. தற்போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவபீடத்திலிருந்து வெளியேறும் மாணவர்கள் நாட்டுக்காக உழைக்கவேண்டும்.

கடந்த காலத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மருந்து விலைகளை பாரியளவு குறைத்தார். அதேபோல் அமைச்சர் ஹக்கீமும் நாட்டு மக்களின் குடிநீருக்காக பல்வேறு பிரயத்தனங்கனை மேற்கொண்டு வருகின்றார்.

நாம் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் மேற்கொண்ட போதிலும் அதற்கான பிரசாரங்கள் மிகவும் குறைவாகும். எனினும் இன்று ஆர்ப்பாட்டங்களுக்கும் அதனை சார்ந்த விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

கல்வி கற்ற சமூகம் நாட்டில் இருக்கவேண்டும் என்பதற்காக 13 வயது வரை கட்டாயக்கல்வியை நாம் அறிமுகம் செய்துள்ளோம்.

கடந்தஅரசாங்கம் முன்னுரிமையில்லாத பெறுமதியில்லாத அபிவிருத்திகளையே முன்னெடுத்தது. ஆனால் எமது அரசாங்கம் மக்களுக்கு தேவையான அவசியமான அபிவிருத்திகளையேமேற்கொள்கின்றது.

எனினும் இதற்கான பிரசாரங்கள் கிடைக்கப் பெறாதது துரதிஷ்டமானது.

இரத்தினபுரி தினகரன் நிருபர்

 

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை