அரசை சரியாக வழிநடத்தும் பணி மஹிந்தவிடம்

கம்பஹா மாவட்ட எம்.பி பிரசன்ன ரணதுங்கவுடன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கடந்த தினங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தாலும் தற்போது பெரும்பான்மை எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. எதிர்க்கட்சி தலைவர் பதவியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறானது? 

எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளாக அமைவது அரசாங்கத்தைச் சரியான பாதையில் பயணிக்கச் செய்வதும், கூடிய சீக்கிரத்தில் அரசாங்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் அவருக்கும், எதிர்க்கட்சியிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த மொத்த நாட்டினதும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எனவே, எதிர்காலங்களினுள் இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் தவறான செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி அரசாங்க எதிர்ப்பு வேலைத்திட்டங்களை பாராளுமன்றத்தில் மேற்கொள்வதற்கான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. எனவே, பலம்மிக்க எதிர்க்கட்சி ஒன்றின் எதிர்க்கட்சித் தலைவராக அவரால் அப்பணியினைச் செய்ய முடியும். 

பிரிவினைவாத பெடரல் அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆயத்தங்கள் உள்ளதாக உங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றீர்கள். இந்தியாவின் மாநில அரசுகளுக்கும் இல்லாத அதிகாரங்கள் அந்த அரசாங்கத்திடம் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதாகவும் எதிர்க்கட்சியின் சிலர் கூறுகின்றனர். எனினும் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்றப் போவதில்லை என அரசாங்க தரப்பு கூறுகின்றதே...? 

அந்த தெரிவுக்குழுவில் நானும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் இருக்கின்றோம். அரசியலமைப்பு மாற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பெரும் அக்கறையுடன் செயற்படுவதை நாம் காண்கின்றோம். இது மறைத்துச் செய்யப் போகும் ஒரு செயற்பாடாகவே அவர்களது செயற்பாடுகளைப் பார்க்கும் போது தெரிகின்றது. முக்கியமாக ஒற்றையாட்சி எனக் கூறினாலும் மாகாண சபைகளுக்குச் சட்ட ரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த அதிகாரங்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அந்த மாகாண சபையின் பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். இதற்கான பெரியதொரு செயற்பாடுள்ளது. எனவே, இது ஒற்றையாட்சியாக இருக்கப் போவதில்லை. மாகாண சபைகளுக்கு வழங்கி மீளப்பெற முடியாத அதிகாரங்களை வழங்கினால் இந்தியாவில் மாநில அரசுகளை விடவும் அதிகாரங்கள் இருக்கும்தான். மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகார முறையினை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் போது, ஆளுநர் ஒருவர் இல்லாமல் போவார். அப்போது ஜனாதிபதியினால் தேவையான முறையில் கலைப்பதற்கு முடியாத நிலை ஏற்படும். எனவே, இதற்கு எப்படியும் இந்நாட்டு மக்கள் இடமளிக்கப் போவதில்லை.  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 21 பேர் தனியான கூட்டணியாகச் செயற்படுவதற்கான ஆயத்தங்கள் இருப்பதாகத் தெரிகின்றது. இவ்வாறான சூழ்ச்சிகள் வெற்றியளித்தால் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு என்ன நடக்கும்? 

இவ்வாறான நிலை முன்னைய காலங்களிலும் இடம்பெற்றிருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டதை இந்த முழு நாடும் அறியும். இவ்வாறானவர்கள் ஸ்ரீ.ல.சு.கட்சியில் பிரிவினைகளை ஏற்படுத்துவதற்கு முன்னைய காலங்கள் பூராவும் செய்தார்கள். எனினும் அவ்வாறான சதிகளை முறியடிப்பதற்கு அன்று மஹிந்த ராஜபக்ஷவால் முடிந்தது. இவ்வாறான விடயங்களைச் செய்வது மேற்கத்தேய நாடுகளின் சார்புத் தலைவர்களே. அவர்களின் தேவை இந்த அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதேயாகும். பதவிகளைத் துறந்து செல்ல முடியாத, பதவிகள் இன்றி இருக்க முடியாதவர்கள்தான் இவற்றிற்கான ஒத்துழைப்புக்களைச் செய்வார்கள். 

இவ்வாறான நிலையில் நீங்கள் கூறிய நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்குமா? 

இந்த பெடரல் அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிராக செயற்படுவதற்கு நாம் கூட்டணி அமைக்கத் தேவையில்லை. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே எம்மால் இதனைச் செய்ய முடியும். தேவைப்படுவது ஸ்ரீல.சு. கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்மோடு ஒன்றிணைவதேயாகும். அடுத்த விடயம் இதை கூறுவதைப் போன்று இலகுவாகச் செய்ய முடியாது. அதற்காகப் பாரிய செயற்பாடுகள் உள்ளன. இதனைச் செய்வதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும். அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும். தொகுதி மட்டத்தில் நாம் பலமடைந்திருக்கின்றோம். எனவே, மக்கள் அவர்களுக்கு இவ்வாறான ஒன்றைச் செய்வதற்கு ஒத்துழைப்பை வழங்கமாட்டார்கள். சர்வஜன வாக்கெடுப்பின்போது அது தோல்வியடைய முடியும். 

அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல எதிர்க்கட்சி ஆயத்தமாகின்றது. எனினும் முதலில் ஜனாதிபதித் தேர்தலுக்கே செல்ல வேண்டும் என ஆளும் தரப்பு கூறுகின்றது. எவ்வாறாயினும் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முடியுமாக இருக்குமா? 

தற்போது ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதித் தேர்தலைக் கோரினாலும் நாட்டின் ஜனாதிபதி தொடர்பில் பிரச்சினைகள் இல்லை. அவர்கள் பெரும்பான்மை வாக்குகளால் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். எனினும் ஆளும் தரப்பிற்கு பெரும்பான்மை பலம் இல்லை. இந்த வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டாலும் மக்கள் அதற்கு ஏமாறமாட்டார்கள். அரசியலமைப்பை நிறைவேற்றித் தருகின்றோம் என்ற வாக்குறுதியினால் அரசுக்கு இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும். எனவே, மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிக்காரர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றார்கள். ஐ.தே. கட்சியினுள்ளே குழப்பங்கள் உள்ளது. ஒவ்வொருவரும் பிரதமராவதற்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, இவர்களை மேற்குலக நாடுகள் கட்டிப்போட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அரசியலமைப்பை அமைத்துக் கொள்ளும் வரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. எனினும் பாராளுமன்றத்தினுள் பெரும்பான்மை அவர்களுக்கு இல்லை.  

ஆளும் தரப்பினுள் உள்ளக பிரச்சினைகள் உள்ளதாக நீங்கள் கூறினீர்கள். எனினும் ஸ்ரீ.ல.சு. கட்சியினுள்ளும் குழப்பங்கள் உள்ளனவே. இதுவரையில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கப்படவில்லை. எனவே, அடுத்த தேர்தலில் எவ்வாறு முகங்கொடுகப் போகிறீர்கள்? 

இரு தரப்பும் இணையும் போது குழப்பங்கள் ஏற்படத்தான் செய்யும். பல்வேறு கருத்துக்களை உடையவர்கள்தான் இந்தக் கட்சிகளில் இருக்கின்றார்கள். எனவே, குழப்பங்கள் இருக்கின்றன. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. என்றாலும் நாம் அரசியல் ரீதியில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றோம். கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. எனினும் இந்த அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக அமைந்து நாம் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியாக முன்னணி வகித்தோம். எனவே, இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆதரவு இருப்பது தாமரை மொட்டு விடமாகும். மக்கள் ஆணையின்றி தேசிய பட்டியல் ஊடாக வந்தவர்கள் கூறுபவற்றைச் செய்யமுடியாது. 

பொது நிலைப்பாட்டுடன் ஒன்றாக இணைந்த கூட்டணி அமைத்தாலன்றி மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாது தானே? 

கூட்டணியாக தேர்தலுக்குச் செல்வதற்காக இணக்கப்பாட்டிற்கு ஆயத்தமாகும் போது முதலிலேயே பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டால் பிரச்சினைகள் தோன்றும். அனைத்து கூட்டணி அமைக்கும் கட்சிகளும் நாட்டில் பெரும்பான்மை அரசில் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கட்சிக்கே ஒரு தலைமைத்துவம் இருக்க வேண்டும். நாம் நிபந்தனைகளின்றியே கூட்டணி அமைக்க வேண்டும். எம்மிடம் மக்கள் ஆதரவு இருக்கின்றது. அதேபோன்று மற்றைய தரப்பிற்கு அரச பலம் உள்ளது. எனவே, நாம் கூட்டணி அமைத்து வெற்றியைப் பெற வேண்டும்.

சுபத்ரா தேசப்பிரிய

(தமிழில்: எம்.எஸ். முஸப்பிர் - புத்தளம் விஷேட நிருபர்)

Wed, 01/16/2019 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை