அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு உயிர் வாழும் வரை அரசாங்க ஊதியம்

RSM
அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு உயிர் வாழும் வரை அரசாங்க ஊதியம்-Life Time Salary and Payments for Disabled and Killed Soldier's Relations

- உயிரிழந்த வீரர்களின் தங்கிவாழ்வோருக்கும் ஊதியம்
- ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை

கடமையில் இருக்கின்றபோதோ அல்லது பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாகவோ அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பணிகளின்போதோ அங்கவீனமுற்ற முப்படையினருக்கும் உயிர்நீத்த படையினரின் மனைவிமார் மற்றும் தங்கி வாழ்கின்றவர்களுக்கும் 55 வயது வரையில் வழங்கப்பட்ட ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை உயிர்வாழும் வரையில் வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த இரண்டு மாத காலப்பகுதியில் இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அங்கவீனமுற்ற படைவீரர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்துவந்த இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்துவதற்காக நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற, உயிர்நீத்த படைவீரர்களின் தேசிய அமைப்பு, படைவீரர்களின் மனைவிமார்களின் மாவட்ட மற்றும் தேசிய அமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அங்கவீனமுற்ற படையினரால் 08 கோரிக்கைகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அந்த அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியின் வழிகாட்டலில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

படைவீரர்களின் தேவைகளை அறிந்து அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி, தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் இதன்போது படைவீரர்களின் பாராட்டுக்குள்ளானது.

பாதுகாப்பு அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சனத் வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான அநுராத விஜேகோன், விஜிதா மாயாதுன்னே ஆகியோரும் முப்படைகளையும் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Sat, 01/26/2019 - 17:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை