புதிய அரசியலமைப்பு: உண்மைகளை வெளிப்படுத்துவது அவசியம்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் தற்போது வெளிவந்திருக்கும் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் உண்மையைக் கூறுவதற்கு அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் ஏன் தயங்குகின்றனர் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா மக்களுக்கு உண்மையைக் கூறுவதற்கு இவர்கள் முன்வர வேண்டுமென்றும் கேட்டுள்ளார். 

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,  

நாட்டில் தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள் தெற்கிலும் வடக்கிலும் வேறுபட்டதாக இருக்கின்றன. அதிலும் அரசியல் தலைவர்களும் முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

ஒற்றையாட்சி என்றும் ஒருமித்த நாடென்றும் சமஷ்டி என்றும் கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் வரைபில், தற்போது உள்ளதை எடுத்துப் பார்த்தால் ஒற்றையாட்சி அல்ல என்பதை கூறுகின்றேன். ஆனால் அது தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாகத் தீர்க்கக் கூடிய வரைபாக இல்லாவிட்டாலும் அதில் இன்னும் எமக்குத் தேவையான சில சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன. ஆகவே மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் அதன் உண்மையைச் சொல்வதற்கு புத்திஜீவிகளும், அரசியல் தலைமைகளும் தயங்குகின்றனர். குறிப்பாக ஆட்சியில் இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றது. அத்தோடு தெற்கிலும் வடக்கிலும் பல்வேறு கருத்துக்களும் வெளியிடப்படுகின்றன. 

குறிப்பாக வந்திருக்கும் வரைபு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல் சமஷ்டிக் குணாதிசயங்களைக் கொண்டதாக இருந்தாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துப்படி பௌத்தத்திற்கு முன்னிரிமை என்ற அடிப்படையில் ஒற்றையாட்சியிலான தீர்வே வருமென தெட்டத்தெளிவாக கூறியிருக்கின்றார்.  

ஆகையினால் ஐக்கிய தேசியக் கட்சியினது ஆதரவு இல்லாமல் இந்த வரைபு அப்படியே புதிய அரசியலமைப்பாக வெளிவர முடியாது. ஆகவே வெளிவந்திருக்கும் வரைபில் உள்ளவாறு அரசியலமைப்பு வருமா என்பதும் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.  

ஐக்கிய தேசியக் கட்சியே இந்த வரைபை எதிர்ப்பது போன்று வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு மாறாக வேறு கருத்துக்களை முன்வைக்கின்ற போது இந்த வரைபு வருமென்று நாங்கள் எப்படி நம்ப முடியும். ஆகவே இந்த அரசியலமைப்புதொடர்பில் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றார். 

(பருத்தித்துறை விசேட நிருபர்)

Tue, 01/15/2019 - 08:06


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக