இரண்டும் ஒரேவிதமாக திட்டமிடப்பட்டவை

* லசந்த விக்கிரமதுங்க படுகொலை
* கீத் நொயார் மீதான தாக்குதல்

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயார் மீதான தாக்குதல் மற்றும் அவரை சித்திரவதைசெய்தமை ஆகியன ஒரே விதமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளவையென குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் நேற்று கல்கிசை பிரதம மஜிஸ்திரேட் நீதிபதி முஹம்மட் மிஹாலுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேற்படி வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள ஐந்து கையடக்கத் தொலைபேசிகளின் அறிக்கை அவசியமென புலனாய்வு பிரிவு அறிவுறுத்தியது.

எனினும் மேற்படி அறிக்கை இதுவரை தமக்கு கிடைக்கவில்லையெனவும் அந்த அறிக்கையை உடனடியாக கிடைக்கச் செய்யும்படியும் அந்த அறிக்கைக்கிணங்க விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உதுலாகம, இரண்டாவது சந்தேக நபரான கல்கிஸை குற்றத்தடுப்பு பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால மற்றும் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். (ஸ)

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை