விசாரணைகளை துரிதமாக்க மேலுமொரு குழு நியமனம்

அங்குனுகொளபெலஸ்ஸவில் கைதிகள் மீதான தாக்குதல்

52 நாட்களில் சிறைச்சாலைகள் மிக மோசமாக சீர்குலைவு

அங்குனுகொளபெலஸ்ஸவில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார். விசாரணை குழு அறிக்கைகள் எதிர்வரும் வாரத்தில் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அதற்கிணங்க குற்றமிழைத்தோர் எவராகவிருந்தாலும் எத்தகைய உயர் பதவி வகித்தாலும் அவர்களுக்கெதிராக கடும் தண்டனையைப் பெற்றுக்கொடுக்க பின்நிற்கப் போவதில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அங்குனுகொளபெலஸ்ஸ சம்பவம் உட்பட பல்வேறு சம்பவங்கள் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன. நாம் பொறுப்பில் இல்லாத 52 நாட்களில் எம்மால் கட்டியெழுப்பப்பட்ட சிறைச்சாலைகள் துறை நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சீர்குலைக்கப்பட்டுள்ளன. அங்குனுகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து நாம் இடமாற்றம் செய்த அதிகாரிகள் கூட அக்காலத்தில் மீள அங்கு நியமிக்கப்பட்டுள்ளமை போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீதியமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்குனுகொளபெலஸ்ஸவில் இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. சி.சி.ரி.வி கமரா மூலம் பெறப்பட்டுள்ள சிறைக் கைதிகள் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் இணையத்தளங்கள் மூலமும் வெளிவருகின்றன. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி சி.சி.ரி.வி கமரா உபகரண அறை தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான விசாரணையின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமையும் ஏனைய குழுவின் அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதியும் கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

எவ்வாறாயினும் மேற்படி தாக்குதல் சம்பவத்தை சரியென நான் நியாயப்படுத்தப் போவதில்லை. அதேவேளை தாக்குதலுக்குள்ளானவர்களின் குடும்பத்தினர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் எமது வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சம்பவம் கேள்விப்பட்ட உடனேயே சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரியொருவர் உட்பட மூவர் கொண்ட குழுவொன்றை அமைத்தேன். அதனைத் தவிர நீதியமைச்சின் அதிகாரி, ஜனாதிபதி செயலக அதிகாரி, பொதுநிர்வாக அமைச்சின் அதிகாரியென மூவரடங்கிய குழுவொன்றையும் நியமித்து அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் மேலும் பல சம்பவங்கள் தொடர்புபட்டுள்ளன. இவை இன்று நேற்று இடம்பெற்றதல்ல. 2018 நவம்பர் 17 ஆம் திகதி நடந்த சம்பவம் சிறைச்சாலை அமைச்சானது 2018 மே மாதம் முதலாம் திகதியே மீள நீதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாம் கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். பல மாற்றங்களையும் ஏற்படுத்தினோம். அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக விடயங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கும் ஜனாதிபதியால் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. சில சிறைச்சாலைகள் விசேட பொலிஸ் செயலணியின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. சில அதிகாரிகள் சில சம்பவங்களில் நேரடியாக தலையிடுவதும் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுப்பதும் இடம்பெற்றுள்ளது. அது எமக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அங்குனுகொளபெலஸவில் கடந்த ஒக்டோபர் 27ல் அதிகாரிகள் சிலருடன் சிறைக்கைதிகள் முரண்பட்டுள்ளனர். தங்களைப் பார்வையிட வரும் உறவினர்களை ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி பரிசோதனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் அது எவ்விதத்திலும் உண்மையில்லை. அவ்வாறானவொரு விடயத்தை சிலர் உருவாக்கப் பார்த்தனர். உண்மையில் அப்படி இடம்பெறவில்லை. எனினும் போதைவஸ்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகம் எழுந்தால் அவ்வாறு சோதனை செய்யவும் நேரலாம். மேற்படி சம்பவம் ஒக்டோபர் 21 ஆம் திகதியே இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து 25 ஆம் திகதி நாம் விசாரணைகளை மேற்கொண்டோம். ஏழு அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்தோம். எனினும் 26 ஆம் திகதி நாம் அரசிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதால் அதற்கு பின்னரான பொறுப்பை ஏற்கமுடியாது. நாம் மறுசீரமைப்பு செய்துவந்த அனைத்தும் மீள சீர்குலைக்கப்பட்டது என்றே கூறமுடியும்.

நவம்பர் 16 ஆம் திகதி ஹோகந்தர வழக்குடன் சம்பந்தப்பட்ட கைதி மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். அந்த நபரை றீட்டா ஜோன் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒருவரும் மேலும் படுகொலையொன்றுடன் சம்பந்தப்பட்ட ஒருவரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கற்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பல சம்பவங்களைக் கூறமுடியும். எவ்வாறாயினும் கைதிகள் நிராயுதபாணிகள் அவர்களை கட்டுப்படுத்த வேண்டுமேதவிர தாக்குதல் நடத்தக்கூடாது. மூன்று அடி நீளமான பொல்லுகளால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரென்ற வகையில் நான் இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன். கட்டுப்படுத்த முடியாது போனால் உயரதிகாரிகள் மட்டத்திலிருந்து பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி வரும். நாம் பழைய நிலைக்கு சிறைச்சாலை துறையை மீள கட்டியெழுப்ப வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 01/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை