வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அணி சாதனை

இந்தியாவின் ஹைதரபாத் நகரில் இடம்பெற்ற போல்பெட்மின்டன் போட்டித்தொடரில் இலங்கை அணி சார்பாக பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.எம்.இர்பானின் வழிகாட்டல் மற்றும் பயிற்சியில் கலந்துகொண்ட வாழைச்சேனை அந்நூர் தேசியபாடசாலை அணியின் 16வயதுக்குட்பட்ட அணியினர் சிறந்த அணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் போட்டித்தொடரில் இலங்கை அணி இலங்கை அணி இரண்டாமிடத்தை பெற்றுக்கொள்ள அந்நூர் தேசிய பாடசாலை அணியினர் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இந்தியாவின் ஏழு மாநில அணிகள் பல்வேறு வளங்கள் பல பயிற்சிகள்,பல போட்டிகளை எதிர்கொண்ட அனுபவங்களுடன் களமிறங்கிய போதும் குறுகிய காலப்பயிற்சி,போதிய வளமின்மை,இவ்வாறான போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மாணவர்களை பயிற்றுவிக்காமை போன்ற எதிர்மறையான காரணிகள் இருந்தும் சர்வதேச அணியினருடன் மிக சவாலான நிலைக்கு முகங்கொடுத்து கிழக்கின் அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்றிருப்பது பாடசாலை மட்டங்களில் பெரும் சாதனை என்பதோடு சவால்களுக்கு முகங்கொடுத்து சர்வதேச சமூகத்தின் பங்காளிகளாக பாடசாலை மாணவர்களை மாற்றும் தேசிய கல்விக் குறிக்கோள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.எம்.இர்பான் தெரிவித்தார்.

இலங்கையில் தேசிய பாடசாலை மட்டங்களில் நடைபெற்ற இந்த பெட்மின்டன் போட்டித்தொடரில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு செல்வதற்கு நிதிவசதி இன்மையால் பாடசாலையால் அனுப்பி வைப்பதற்கு தயக்கங்கள் காட்டப்பட்ட நிலையில் பிரதேச சமூக நலன்விரும்பிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து எடுத்த நடவடிக்கைகள் மூலமாக மாணவர்கள் இந்தியாவுக்கு பயணமாகியிருந்தனர்.

இதன் மூலம் சர்வதேச அளவில் விளையாட்டுப்போட்டித் தொடர் ஒன்றில் கல்குடா சார்பாக பங்குபற்றிய முதலாவது பாடசாலை அணியாக வாழைச்சேனை அந்நூர் சாதனை படைத்ததோடு பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தெரிவித்தார்.

வாழைச்சேனை விசேட நிருபர்

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை