சீனாவுடன் இணைய தாய்வானுக்கு ஷி ஜின்பிங் கட்டாய வலியுறுத்தல்

சீனாவுடன் தாய்வான் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

தாய்வான் தொடர்பான முக்கிய கொள்கை அறிக்கையின் 40ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டு ஆற்றிய உரையில் ஜனாதிபதி ஷி இவ்வாறு கூறினார். அந்தக் கொள்கை அறிக்கை, சீன மற்றும் தாய்வான் உறவு மேம்பட வழிவகுத்தது.

இந்நிலையில் ஒரு நாடு இரு ஆட்சி முறைகள் அடிப்படையில் அமைதியான ஒன்றிணைவுக்கு அவர் அழைப்பு விடுத்தார். எனினும் படைகளை பயன்படுத்துவதற்கு சீனாவுக்கு உரிமை இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

தாய்வான் சுயாட்சி மற்றும் நடைமுறை சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தபோதும் தனது பிரதான நிலமான சீனாவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திர பிரகடனத்தை வெளியிடவில்லை.

இந்த தீவு தமது பிரிந்த மாகாணம் என்று சீனா கருதுவதோடு தாய்வானை ஒன்றிணைக்கும் சீனாவின் நீண்ட கால கொள்கையை பிரதிபலிப்பதாக ஷி ஜின்பிங்கின் உரை இருந்தது.

இரு பக்கமும் சீன குடும்பத்தின் ஓர் அங்கம் என்று குறிப்பிட்ட ஷி, தாய்வானியரின் சுதந்திரம் வரலாற்றுக்கு பாதகமான சாத்தியமற்றது என்று ஷி குறிப்பிட்டார்.

சுதந்திரம் என்பது துன்பத்தையே கொண்டுவரும் என்பதை தாய்வான் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எச்சரித்த சீன ஜனாதிபதி, தாய்வான் சுதந்திரத்தை முன்னெடுக்கும் எந்த ஒரு பிரசாரம் தொடர்பிலும்் சீனா பொறுமை காக்காது என்றும் குறிப்பிட்டார்.

சீனா தனது கொள்கை குறித்து அண்மைய ஆண்டுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இது நாட்டின் பிரதான இறைமை தொடர்பான கேள்வியை ஏற்படுத்துவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

சீனா அல்லது தாய்வான் இரு நாடுகளில் ஒன்றுடனேயே இராஜதந்திர உறவுகளை பேண முடியும் என்று சீனா ஏனைய நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்கிறது.

இந்நிலையில் தாய்வானுடன் இராஜதந்திர உறவு கொண்டிருக்கும் எஞ்சிய நாடுகளையும் சீனா தன்பக்கம் இழுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை