மாத்தறை - பெலியத்த ரயில் பாதை வேலைகள் பூர்த்தி

நாளை ஞாயிறு வெள்ளோட்டம்

மாத்தறை−கதிர்காமம் ரயில் பாதை அமைப்பின் முதற்கட்டமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள மாத்தறை-−பெலியத்த வரையிலான ரயில் பாதையின் வெள்ளோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (06) காலை 10 மணிக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த ரயில் பெலியத்தயிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லவுள்ளது.

மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை நடத்தப்படவுள்ள ரயில் சேவை மூன்று கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் முதற் கட்டமாகவே மாத்தறையிலிருந்து 26 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பெலியத்த வரையில் ரயில் சேவை நடத்தப்படும்.

இரண்டாம் கட்டமாக பெலியத்தவிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையில் 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவையை முன்னெடுப்பதற்காக சுமார் 278.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை 'சைனா எக்ஸீம்' வங்கி வழங்கியுள்ளது.

மாத்தறை - பெலியத்த ரயில் பாதையில் கெகனதுர, பம்பருந்த, வெவுருகன்னல, பெலியத்த ஆகிய நான்கு பிரதான ரயில் நிலையங்கள் உள்ளன. அதேபோன்று பிலந்துவ மற்றும் வெஹெரஹேன ஆகிய இடங்களுக்கு இடையே 02 உப ரயில் நிலையங்கள் உள்ளன.

ரயில் நிலையத்தில் மக்கள் சென்று வருவதற்கு இலகுவாக மேம்பாலத்துக்கு பதிலாக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை - பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப் பாதையும் 268 மீற்றர் நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளன. இலங்கையில் 559 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையே இருந்தது. இதனைத்தவிர பெலியத்த ரயில் பாதையில் மேம்பாலங்களும் அமைந்துள்ளன.

நில்வளா கங்கையூடாகச் செல்லும் இப்பாதையில் 12 பாலங்களும் 18 குறுக்கு வீதிகளும் 49 மதகுகளும் 23 ரயில் கடவைகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 01/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை