தனியார் மருத்துவமனை கட்டணங்கள் ஒழுங்குபடுத்தும் சட்ட வரைபு பூர்த்தி

மகேஸ்வரன் பிரசாத்

தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான உத்தேச சட்டத்தின் வரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். உத்தேச சட்டவரைபு இரண்டு நாட்களுக்கு முன்னர் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி சட்டமூலமாகத் தயாரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளோம். மருந்துத் தட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அதேநேரம், திடீரென மருந்து தட்டுப்பாடுகள் ஏற்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் சகல அரசாங்க வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடமும் தலா 10 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடான மருந்துகளை உள்ளூர் சந்தையில் கொள்வனவு செய்வதற்கே அந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் 500 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி மருந்துகளுக்குக் காணப்படும் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சகல மக்களுக்கும் தரமான மருந்துகளை, நியாயமான விலையில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெுடுத்துள்ளோம். எமது இந்த வெற்றிகரமான திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் உலக வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு எனக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

நிதியமைச்சர்களே பெரும்பாலும் அழைக்கப்படும் நிலையில் சுகாதார அமைச்சரான என்னை அழைத்திருந்தார்கள். 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கும் அவர்கள் முன்வந்துள்ளனர். இதனை வழங்குவதற்கு தயாராகவிருந்த நிலையிலேயே கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றது. இவ்வாறான நிலையில் மீண்டும் அவர்கள் எமக்கு மேலதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளனர். இதற்கமைய உலக வங்கியினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளது.

நான் சுகாதார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் இருதய கோளாறுக்குப் பொருத்தப்படும் 'ஸ்டென்ட்' ஒன்றின் விலையை மூன்றரை இலட்சத்திலிருந்து ஒன்றரை இலட்சமாகக் குறைத்துள்ளேன். இதுபோன்று பல்வேறு மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அரசாங்க மருத்துவசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள், இருதய சிகிச்சைப் பிரிவுகள் என்பவற்றை அதிகரித்துள்ளோம். சிறுவர் மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் தனியார் வைத்தியசாலைகளில் அதிகளவு பணம் அறவிடப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தோம். எனினும், 51 நாள் அரசியல் குழப்பத்தினால் எல்லாம் தடைப்பட்டன. தற்பொழுது இதற்கான இறுதி வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Thu, 01/17/2019 - 06:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை