சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவத் தயார்

இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்கும் சாத்தியம் பற்றி நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு (15) ெவாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்மன் லெகார்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான அண்மைய முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்துக்கு இந்த சந்திப்பின்போது விளக்கிக் கூறினார்.

2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற தளர்வு நிலையையடுத்து பொருளாதாரத்தை ஸ்திரமாக்கும் நோக்குடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு கடப்பாட்டுடன் இருப்பதாகவும் இலங்கை குழு இந்த சந்திப்பின்போது விளக்கியிருந்தது.

சர்வதேச நாணய நிதியம் 2016 இல் இலங்கைக்கு மூன்று வருட கால விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணங்கியிருந்ததுடன் அதில் 1 பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது.

இப்போதைய நிலையில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும், நிதியின் திட்டத்தை மீண்டும் தொடர்வது பற்றி பேசுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த மாதம் (பெப்ரவரி) இலங்கைக்கு விஜயம் செய்யுமென்றும் நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்மன் லெகார்ட் தெரிவித்தார்.

வொஷிங்டனுக்கு சென்ற இலங்கை குழுவில் அமைச்சரவை அந்தஸ்தற்ற பொது விநியோகம் மற்றும் பொருளாதார சீர்திருத்த அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, திறைசேரியின் செயலாளர் ஆர். எச். எஸ். சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவி ஆளுநர் என்.பி. வீரசிங்க, நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான பொருளாதார ஆலோசகர் தெசால் டி மெல், மற்றும் இலங்கைகான சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று மற்றும் நிறைவேற்று பணிப்பாளர் எம். சிறிவர்தன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 

Thu, 01/17/2019 - 06:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை