அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம்

அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக உரத்தை பெற்றுக் கொடுக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் பீ. ஹரிசன் நாட்டிலுள்ள சகல விவசாயிகளையும் உற்பத்தியில் ஈடுபடுத்துவதே தனது எதிர்பார்ப்பெனவும் தெரிவித்தார்.

லக்கல புதிய பசுமை நகரில் அமைக்கப்பட்ட விவசாய சேவைகள் மத்திய நிலையத்தை மக்கள் வசம் ஒப்படைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நான்காவது வருட பதவி பூர்த்திக்கு இணைந்ததாக இந்த லக்கல விவசாய மத்திய நிலையம் திறக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய அமைச்சர், விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்குமாறு நான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அத்துடன் விவசாயம் செய்வதற்கான ஆர்வமும் அதிகரிக்கும்.

மாத்தளை, குருநாகல், புத்தளம் ஆகிய இடங்களில் சிறப்பாக பெரியவெங்காயம் பயிரிடப்படுகிறது. ஆனால் அறுவடை செய்யும் போது வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றார்கள். அதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றார்கள்.

நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை விவசாயிகள் வழங்குகின்றார்கள். நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் சரியான திட்டமொன்றை தயாரிக்கவுள்ளேன் என்றார். இந்த போகத்தில் 38 ரூபாவுக்கு நாட்டரிசி நெல்லையும் 41 ரூபாவுக்கு சம்பா நெல்லையும் விலைக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹாரை, விவசாய ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். எம். பீ. வீரசேன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை