சண். குகவரதன் கட்சியிலிருந்து நிறுத்தம்; உப-தலைவர் பதவியிலிருந்தும் நீக்கம்

மேல்மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதனின் கட்சி அங்கத்துவத்தை இடை நிறுத்தியும் அவருக்கு வழங்கப்பட்ட கட்சியின் பதவி நிலையான உப தலைவர் பதவியை நீக்கியுமுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

மேல்மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் கடந்த வாரம் ஊடகங்களில் வெளியிட்ட சில கருத்துக்களும் கட்சி யுடனான அவரது நிலைப்பாடு தொடர்பாகவும் தீர்மானங்களை எடுப்பதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு விசேடமாக நேற்றுக் கூடியது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதற்காக வெள்ளவத்தை "சபயர்" ஹோட்டலில் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இதனைத் தெரிவித்தார்.

இவ் வூடகவியலாளர் மாநாட்டில் கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா, கட்சியின் தேசிய அமைப்பாளர் ராஜேந்திரன், மேல்மாகாண சபை உறுப்பினர் கே.கே.குருசாமி வத்தளை நகர சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சசிகுமார் உள்ளிட்ட கட்சியின் அரசியல் குழுவினர் கலந்து கொண்டனர்.இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது:

மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் உட்பட நாம் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசு கவிழ்க்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டரீதியற்ற முறையில் பிரமராக நியமிக்கப்பட்டார்.

கவிழ்க்கப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சி என்ற வகையில் நீதிக்காகவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் அதனோடு இணைந்து தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் கட்சியின் தலைவர் மனோகணேசனும் கட்சியினரும் ஈடுபட்டு வந்தோம்.

அவ்வாறான நிலையில் மேல் மாகாண சபை உறுப்பினர் (இன்றும் எங்களது மாகாண சபை உறுப்பினர்) சண் குகவரதனின் செயற்பாடுகள் அன்றைய காலகட்டத்தில் திருப்தியளிப்பதாக இருக்கவில்லை. கட்சியின் முடிவுகளை ஏற்று கட்சியின் நிலைப்பாட்டிற்கமைய அவர் செயற்படாமலிருந்தமை கட்சிக்கு முரணான செயற்பாடாகும்.

மஹிந்த ராஜபக்ஷ அணியினரோடு அவருக்கு தொடர்புகள் இருந்ததையும் அவர்கள் சார்ந்த குழுவுடன் செயற்பட்டமை குறித்தும் எமக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக அவர் சார்ந்த உறுப்பினர்கள் ஊடாக ஜனநாயக மக்கள் முன்னணியினது தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசனை, மஹிந்த ராஜபக்ஷ குழுவினர் வந்து அரசாங்கத்திற்கு உதவியளிக்குமாறு கோரி ஏறக்குறைய 65 கோடி ரூபா வரைக்கும் தருவதாக பேரம் பேசப்பட்டது. அதனது ஒலி நாடாவை சமூக வலை தளங்களில் காணக்கூடியதாக இருந்தது.

ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஜனநாயக விரோதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருந்தபோது அதற்கு மாறாகவும் கட்சியின் கொள்கைக்கு முரணாகவும் குகவரதனின் செயற்பாடுகள் இருந்தன.

கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதன் அடிப்படையிலேயே மேல்மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதனின் அங்கத்துவம் இடை நிறுத்தப்பட்டது.

கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்

Thu, 01/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை