5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ; ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் பயணம்

*இருநாட்டு தலைவர்களும் இன்று சந்திப்பு
*6 ஒப்பந்தங்களும் கைச்சாத்து

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) வின் விசேட அழைப்பின் பேரில் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15) பிலிப்பைன்ஸ் பயணமானார்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது 6 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) விற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (16) இடம்பெறவுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் உறவுகள், பரஸ்பர நன்மையை நோக்கமாகக்கொண்டு புதிய உறவுகளை நோக்கி விரிவுபடுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இதன்போது அரச தலைவர்கள் விசேட கவனம் செலுத்தவுள்ளனர்.

தனது இந்த விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் லெஸ்பெனோஸ்கியிலுள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி , ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தக்கஹிகோ நாகக்காகோ வையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1961ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இது என்பதுடன், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இவ்வருடத்தில் அரச தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயமும் இதுவாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிலிப்பைன்ஸில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது . உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவை கட்டியெழுப்பி சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதியின் நட்புறவு வெளிநாட்டு கொள்கையில் மற்றுமொரு முக்கிய விஜயமாக இந்த விஜயத்தை குறிப்பிட முடியும் எனவும்ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டது.

ஒப்பந்தங்கள்

இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்குமிடையில் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு உடன்படிக்கைகள் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன.

பிலிப்பைன்சிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் அத் தூதுக் குழுவில் இடம்பெறும் அமைச்சர்கள் அந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளனர்.

இருதரப்பு நட்புறவு, புரிந்துணர்வு மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட மேற்படி ஆறு உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கிணங்க சுற்றுலாத் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு​, உயர்கல்வி,விவசாயம் மற்றும் விவசாயத் துறைசார்ந்த ஆறு உடன்படிக்கைகளே கைச்சாத்திடப்படவுள்ளன.

சுற்றுலாத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை சுற்றுலாத்துறையில் ஆய்வு மற்றும் அபிவிருத்தி, கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டம், முதலீடு மற்றும் இருதரப்பினாலும் தீர்மானிக்கப்படும் ஏனைய துறைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கானதாகும்.

இந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேறகொள்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க சமர்ப்பித்த பரிந்துரைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் ஊழியர் சேமலாப மற்றும் உரிமைகளை பாதுகாத்தல், திறனாற்றல், தொழில் உரிமை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப் படுத்துதல் குடியகல்வு பணியாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்ட உதவிகளை வழங்குதல் போன்றவை தொடர்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

இரு நாடுகளுக்குமிடையில் உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிலிபைன்ஸ் உயர்கல்வி ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் நகர திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்குமிடையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

விவசாய மற்றும் அதனுடன் தொடர்புபட்டவற்றை உள்ளடக்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட இருப்பதோடு இரு நாடுகளுக்குமிடையில் விவசாய உற்பத்தி, கடற்றொழில், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு மற்றும் பெறுமதி சேர்த்த உற்பத்திகளை விநியோகித்தல் அதன் விற்பனை போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய விவசாய ஆய்வு, ஆய்வுக்காக வெளிநாட்டு பட்டப்பின் படிப்பு கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கான வசதிகளை மேம்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது. தேசிய விவசாய தொழில்துறையில் பட்டப்பின் படிப்பை தொடர்வதில் தேவையான வசதிகளை செய்வது தொடர்பில் பிலிப்பைன்சில் ‘லோஸ் பானோஸ்’ பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது.

பாதுகாப்புத் துறையில் புரிந்துணர்வை மேம்படுத்தல் தொடர்பில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையானது, இருதரப்புக்கிடையில் பாதுகாப்புத்துறை கல்வி, பயிற்சி, பாதுகா ப்பு, தூதுக்குழுவினரை பரிமாறுதல், கூட்டுப் பயிற்சி, நட்புறவுச் சுற்றுலா, மற்றும் மாநாடுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதாக அமையும்.

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை