சகல கட்சிகளும் ஒத்துழைத்தால் விகிதாசார முறையில் தேர்தல்

2020 இல்தான் பொதுத்தேர்தல், ஐ.தே.மு பலமுடன் களமிறங்கும்

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சிப் பொதுச் செயலாளரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் பழைய விகிதாசார தேர்தல் முறையில் அதனை நடத்துவதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைத்தால் மட்டுமே அது சாத்தியப்படும் என்றார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து பல கருத்துக்களை பரப்பி மாகாண சபை தேர்தலை தள்ளிப் போடுவதற்கு சிலர் முயற்சிப்பதாக சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் கேட்ட போதே ஐக்கிய தேசியக்கட்சி பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

எந்தவொரு தேர்தல் குறித்தும் ஐக்கிய தேசியக்கட்சி அச்சம் கொள்ளவில்லை. அவர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாக இருந்தால் அது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும். புதிய கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதாக இருந்தால் எல்லை நிர்ணய முறைமை நிறைவு பெற வேண்டும். அது உடனடியாக சாத்தியப்படக் கூடியதல்ல என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பழைய விகிதாசார முறைக்குச் செல்வதாக இருந்தால் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதனைச் செய்வதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. அதற்கு பாராளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் அதுவொன்றே இலகுவான வழியாகும். அப்படி ஒத்துழைப்பு கிட்டுமாக இருந்தால் விரைவில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவே என்பது கட்சியின் தீர்மானமாகவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் விரைவில் கூடி இறுதித்தீர்மானத்தை எடுத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

ஜனாதிபதி தேர்தலையோ, மாகாணசபைத் தேர்தலையோ கண்டு ஐ. தே. க. அச்சம் கொள்ளவில்லை. கிராமிய மட்டத்திலிருந்து மக்களை தெளிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசிய முன்னணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் எமது புதிய அரசியல் கூட்டணியாக ஜனநாயக தேசிய முன்னணியே களமிறங்கும். அது பலம்வாய்ந்த அணியாகவே அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் மாகாண சபை தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலுமே நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. பொதுத் தேர்தல் 2020ல்தான் நடைபெறும். அதற்குப் போதிய கால அவகாசமிருக்கின்றது. அரசாங்கத்தின் பதவிக்காலம் கூட 2020 வரையில் உள்ளது. அதற்கிடையில் அரசாங்கத்தை எந்தச்சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாது எனவும் ஐ. தே. க பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை