கொழும்பு - காங்கேசன்துறை புதிய சொகுசு ரயில் சேவை 27ஆம் திகதி ஆரம்பம்

யாழ். மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்க ஏற்பாடு

கொழும்பு -_ காங்கேசன்துறைக்கிடையிலான புதிய ரயில் சேவை நாளை மறுதினம் 27 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பமாகின்றது. இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட அதிவேக ரயில் சேவையை, போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோர் காலை 5.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

உத்தரதேவி ரயில் கொழும்பிலிருந்து காங்கேசந்துறை வரை சேவையிலீடுபடுத்தப்படவுள்ளது. அதன் வெள்ளோட்ட சேவை வடக்கு, கிழக்கு நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க மேற்படி ரயிலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் எடுத்துச்செல்லப்படவுள்ளன.

இந்த மக்கள் சேவைக்கு பங்களிப்புச் செய்ய விரும்புவோர் பாடசாலை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை நாளை 26 ஆம் திகதி மதியம் 12.00 மணிக்கு முன்பதாக மருதானை விஜயவர்தன மாவத்தையிலுள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிலும் நாரஹேன்பிட்டியிலுள்ள இ.போ.ச பிரதான அலுவலகத்திலும் ஒப்படைக்க முடியும்.

போக்குவரத்து அமைச்சில் தமது பொருட்களை ஒப்படைப்போர் 0718426868 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். நாரஹேன்பிட்டி இ.போ.ச காரியாலயத்தில் தமது பொருட்களை கையளிக்க விரும்புவோர் 0771056062 இந்த தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தெற்கு மக்களிடமிருந்து வடக்கு பாடசாலை மாணவர்களுக்காக கொண்டு செல்லப்படும் மேற்படி கல்வி உபகரணங்கள் 27 ஆம் திகதி யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு கையளிக்கப்படும்.

இந்த நிகழ்வுக்கு சமகாலத்தில் கிளிநொச்சி அறிவியல் நகர் ரயில் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

புதிய உத்தரதேவி ரயிலுக்கான நவீன ரயில் பெட்டிகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளதுடன் ஆறு பெட்டிகளைக் கொண்ட அந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்புப் பெட்டியில் 52 ஆசனங்களும் குளிரூட்டப்பட்ட இரண்டாம் வகுப்பில் 64 ஆசனங்களும் மூன்றாம் வகுப்பு பெட்டியில் 152 ஆசனங்களும் உள்ளன. இதற்கிணங்க மேற்படி ரயிலில் 724 பேர் ஒரே தடவையில் பயணிக்க முடியும்.

இந்த ரயில் கம்பஹா, பொல்ஹாவல, குருநாகல், மஹவ, கல்கமுவ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, பளை, கொடிகாமம், யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நிறுத்தப்படும்.

மேற்படி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு தான் இறங்க வேண்டிய அடுத்த ரயில் நிலையம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக ஜீ.பி.எஸ் தொழில்நுட்ப வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். (ஸ)

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை