ரூ 1,000 தர முடியாவிட்டால் தோட்டங்களை விட்டு உடன் வெளியேறுங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1,000 ரூபா என்ற கோரிக்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. உரிய சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளித்துவிட்டு வெளியேற வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், 600 ரூபாவுக்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பதாக வதந்திகள் வெளியாவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கக் கோரி ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பைக் கோரி இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் போராடிவருகின்றனர். வருடாவருடம் தோட்டத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், கம்பனிகளின் அடக்குமுறை இன்னமும் குறையவில்லை.

தோட்டங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் குறித்து தொழில் அமைச்சுக்குப் பல கடிதங்களை அனுப்பியுள்ளோம். தோட்டங்கள் காடாகிப்போயுள்ளமை பற்றிச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இவ்வாறான நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாவைக் கோரியுள்ளோம். சில தோட்டங்களில் கைக்காசாக 1,000 ரூபா வழங்குவதுடன், உணவுக்காக 200 ரூபாவும், போக்குவரத்துக்கு 50 ரூபாவும் வழங்குகின்றனர். இப்படியான சூழலிலேயே நாம் அடிப்படைச் சம்பளமாக 1,000 ரூபாவைக் கோருகின்றோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான நாம் எமது இந்தக் கோரிக்கையிலிருந்து பின்வாங்கப்போவதில்லை.

2014ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்கள் இழுபறியாகப் போனபோது அவற்றுக்கான நிலுவைப் பணத்தையும் பெற்றுக் கொடுத்தோம். 2015ஆம் ஆண்டு ஒன்றரை வருடங்கள் இழுபறி ஏற்பட்டபோது நிலுவைப் பணத்தைப் பெற்றுக் கொடுக்க முற்பட்டபோது அரசாங்கத்தின் தலையீட்டினால் இடைக்கால ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

இம்முறை கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரினோம். ஆரம்பத்தில் 600 தருவதற்கு இணங்கினர். போராட்டங்களின் பின்னரும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமரான பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 700 ரூபாவாக அதிகரிக்க முன்வந்தனர். எனினும், எமது 1,000 ரூபா கோரிக்கையை முன்வைக்கவில்லை. கேட்ட சம்பள அதிகரிப்பை வழங்காவிட்டால் தோட்டத்தில் பணியாற்றுவதற்கு எவரும் இருக்க மாட்டார்கள்.

இவ்வாறான நிலையில் நாளையதினம் (இன்று) தொழில் அமைச்சில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இதில் தீர்வொன்று கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதேநேரம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடம் தொழிற்சங்கங்கள் 600 ரூபாவுக்கு ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருப்பதாக வதந்திகள் வெளியாகியுள்ளன என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை