தடுப்பு நடவடிக்கை ஆரம்பம் ; 20% சோளப் பயிரே பாதிப்பு

இலங்கையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னரே படைப்புழு பிரச்சினை ஆரம்பமானது. அன்று முதல் இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விவசாய அமைச்சு ஆரம்பித்தது. இதனால் இதன் பாதிப்பை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. தற்போது 20 வீதமான சோளப் பயிர்ச் செய்கைக்கே படைப்புழுவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு 40,000 ரூபா வரை நஷ்ட ஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், இதனை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு தருவிக்கப்பட்ட சோள விதைகள் காரணமாகவே படைப்புழு பரவியதாக எதிரணி தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிராகரித்த அவர் காற்றினூடாக விட்டில் பூச்சி பரவியே இந்த புழு உருவாவதாகவும் தெரிவித்தார்.

படைப்புழு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

ஐ. ​தே.க அரசாங்கம் வேண்டுமென்று இந்த நோய்த் தாக்கத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. விவசாயத்துறையை நாசமாக்க வேண்டுமென்றே இந்த அழிவை நாம் ஏற்படுத்தியதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புழு முதலில் அமெரிக்காவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆபிரிக்க மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இது பரவின. 100 கிலோ மீற்றர் வரை இந்தப் பூச்சி காற்றுடன் கலந்து பறந்து செல்லும். இலங்கையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் அம்பாறை பகுதியில் இந்தப் புழு கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இதனை கட்டுப்படுத்த விவசாய அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. படைப்புழு பிரச்சினையினால் 20 வீதத்திற்கும் குறைவான சோள பயிர்ச்செய்கைகளுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

82 ஹெக்டயரில் இம்முறை சோளம் பயிரிடப்பட்டது. 40 ஹெக்டெயருக்கு படைப்புழுவினால் தாக்கம் ஏற்பட்டது. இவற்றுக்கு முழுமையான சேதம் ஏற்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 40,000 ரூபாவுக்கு உட்பட்டதாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.ஜனாதிபதி தேவையான தலையீடுகளை செய்தார்.

சேதம் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நஷ்ட ஈட்டு தொகையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.தற்பொழுது 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

செயலணியொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். விவசாய அமைச்சு கவனயீனமாக இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டை நாம், நிராகரிக்கிறோம்.

கிருமி நாசினிகளை கொண்டு மாத்திரம் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியாது. 5 வகையான கிருமி நாசினிகள் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர உள்நாட்டு முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு மாதத்தினுள் ஒரு படைப்புழு 1,400 முதல் 1,500 வரை முட்டைகளை இடுகின்றன. இவ்வாறு வேகமாக பரவும் படைப்புழுவை தடுக்க சகல முன்னெடுப்புகளும் செய்யப்பட்டு வருகிறது.

புழுக்களை ஈர்ப்பதற்காக பொறி அமைத்தல், பறவைகளை பயன்படுத்தல்.டுரோன்கள் முறையினூடாக பீய்ச்சுதலையும் பயன்படுத்த இருக்கிறோம்.வெளிநாடுகளில் பயன்படுத்தும் முறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து வருகிறோம்.

ஷம்ஸ் பாஹிம்.மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை