படைப்புழு தாக்கத்துக்கு இறக்குமதி சோளம் காரணமல்ல

உள்நாட்டில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் படைப்புழு பரவுவதற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைகள் காரணமல்ல என விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எம்.டபிள்யூ வீரகோன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து சோள விதைகள் இறக்குமதி செய்யப்படும்போது அவை முழுமையான ஆய்வுகளின் பின்னரே இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளிடம் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.எனவே படைப்புழு தொற்றுக்கு இறக்குமதியான சோள விதைகள் காரணமல்ல. தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்றூடாகவே இப்புழுக்கள் நாட்டுக்குள் பரவியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்படைப்புழு 100 கிலோமீற்றர் தூரத்துக்கு பறக்கும் ஆற்றலுடையது. ஆகையால் அவ்வாறு பறந்தே எமது நாட்டுக்குள் இவை வந்திருக்க வேண்டும் என்றும் வீரகோன் கூறினார்.

தற்போது 45,000 ஹெக்ேடயரில் சோளம் பயிர் செய்யப்பட்டிருப்பதாகவும் இதில் பாதிப்புற்றது மொத்த சோளப் பயிர்ச் செய்கையில் 20 சதவீதமெனவும் தெரிவித்த பணிப்பாளர் நாயகம் இப் புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவூட்டல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

படைப்புழு 80 வகையான பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஆபிரிக்கா, பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகள் படைப்புழுவால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளன. எனினும் எந்தவொரு நாடும் இதுவரை இப்படைப்புழுவை முற்றாக அழிப்பதில் வெற்றி காணவில்லை.

இப்புழுவை அழிப்பதற்காக இதுவரையில் 05 வகையான கிருமி நாசினிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் சோளக்கதிருக்குள் இக்கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டாமென்றும் அவர் விவசாயிகளிடம் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது இப்புழுக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கக்கூடுமென்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது தேசிய மட்டத்தில் சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சோளம் அறுவடை செய்து வரும் விவசாயிகள் தொடர்பில் விவசாய திணைக்களம் முன்னெடுத்துள்ள கணக் கெடுப்பின்படி அறுவடைக்கு பாரிய பாதிப்பு இடம்பெறவில்லையென தெரியவந்திருப் பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உலகில் இரண்டு வகையான படைப்புழுக்கள் உள்ளன. அதில் 'ஆர்' வகையைச் சேர்ந்தவை நெல் வகைகளுக்கும் 'எம்' வகையைச் சேர்ந்தவை சோளம் வகைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. இலங்கையில் தற்போது பரவி வருவது 'எம்' வகை படைப்புழுக்களாகும்.

பலர் சாதாரண மயிர்க் கொட்டியைக் கண்டவுடன் அது படைப்புழுவாக இருக்கு மென நினைத்து பதற்றம் அடைகின்றனர்.

அண்மையில் கும்புக்கெட்டே பிரதேசத்திலும் மக்கள் இவ்வாறு குழப்பமடைந்திருந்தனர். பின்னர் எமது அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்தபோது அது வேறொரு புழு என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

சர்வதேச சோள ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்தியக் கிளையுடன் நான் தொடர்பை எற்படுத்தியிருந்தேன். அதற்கு அவர்கள் படைப்புழுவை அழிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித கண்டுபிடிப்பும் தம்மிடம் இல்லையெனத் தெரிவித்தனர்.

 

 

Thu, 01/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை