1st ODI: SLvNZ; போராடித் தோற்றது இலங்கை

Azaff Mohamed

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் இன்று (3) இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி மார்ட்டின் கப்டில் மற்றும் ஜிம்மி நீசாம் ஆகியோரின் அதிரடிஆட்டத்தின் உதவியுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ஓட்டங்களைக் குவித்தது. 

நியூசிலாந்தின் அதிரடி வீரர் கொலின் மொன்றோவை லசித் மாலிங்க 21 ஓட்டங்களுடன் வீழ்த்திய போதிலும் அதன் பின் இணைந்த மார்டின் கப்டில் மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி அதிரடியாக ஆடி ஓட்டங்களைக்குவித்தது. ஒரு வருட காலத்திற்கு பின் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு உள்வாங்கப்பட்ட கப்டில் 138 ஓட்டங்களைப் பெற்றார். அவருடன் இணைந்து ஆடிய கேன் வில்லியம்சன் 76 ஓட்டங்களை பெற்றதுடன் அதனைத்தொடர்ந்து களம் கண்ட ரோஸ் டெய்லர் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதன் பின் களம் இறங்கியஜிம்மி நீசாம் இறுதி வரை களத்திலிருந்து அதிரடியாக ஆடி வெறுமனே 13 பந்துகளில் 47 ஓட்டங்களைக் குவித்தார். குறிப்பாக திசர பெரேரா வீசிய 49வது ஓவரில் 5 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 34 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லசித் மாலிங்க, திசர பெரேரா மற்றும் நுவன் பிரதீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

372 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக ஜோடி மிக சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தனுஷ்க குணதிலக 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அதனைத்தொடர்ந்து நிரோஷன் திக்வெல்ல 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களம் கண்ட குசல் பெரேரா அதிரடியாக ஆட போட்டி இலங்கை அணியின் பக்கம் சாய்ந்தது. எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட தனியொரு ஆளாக அபாரமாக ஆடிய குசல் பெரேரா 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 49 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 45 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

பந்து வீச்சில் ஜேம்ஸ் நீசாம் 3 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட், பேர்குசன் மற்றும் சோதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக மார்ட்டின் கப்டில் தெரிவு செய்யப்பட்டார். 

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நியூசிலாந்து  371/7 (50)
மார்ட்டின் கப்டில் 138(139)
கேன் வில்லியம்சன் 76(74)
ரோஸ் டெய்லர் 54(37)
ஜேம்ஸ் நீசாம் 47(13)

லசித் மாலிங்க 2/78 (10)
நுவன் பிரதீப் 2/72 (8)
திசர பெரேரா 2/80 (10)

இலங்கை 326/10 (49)
குசல் பெரேரா 102(86)
நிரோஷன் திக்வெல்ல 76(50)
தனுஷ்க குணதிலக 43(62)

ஜேம்ஸ் நீசாம் 3/38 (8)
பேர்குசன் 2/65 (10)
ட்ரெண்ட் போல்ட் 2/65 (10)
சோதி 2/53 (10)

Thu, 01/03/2019 - 15:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை