1,000 ரூபா சம்பளம் இணக்கப்பாட்டை எட்ட இரு நாள் காலக்கெடு

தவறினால் 31க்குள் அரசு தீர்வை வழங்கும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் அரசாங்கம் தலையிட்டு இம்மாத இறுதிக்குள் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் என தொழில் மற்றும் தொழிற்சங்கம் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.

பெருந்தோட்டக் கம்பனிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடன் இன்று முக்கிய சந்திப்பொன்று நடைபெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெருத்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றை நேற்றை தினம் முன்வைத்தார். இது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் ரவீந்திர சமரவீர இதனைக் கூறினார்.

தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பெருந்தோட்டக் கம்பனிகள் தரப்பிலும், தொழிற்சங்கங்கள் சார்பிலும் பரஸ்பரமான கருத்துக்கள் முன்வைக்கப்படு கின்றன. நாளையதினம் (இன்று) முக்கியமான பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. இதில் பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியனவும் கலந்துகொள்கின்றன. இரண்டு நாட்களுக்குள் இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்கு நாம் காலக்கெடு வழங்குவோம். இரண்டு மூன்று நாட்களுக்குள் அவர்கள் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் தொழில் அமைச்சு என்ற ரீதியில் எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு இம்மாத இறுதிக்குள் தொழிலாளர்களுக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் உறுதிமொழிவழங்கினார்.

கடந்த பல வருடங்களாக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவிருந்த நிலையிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குழப்பம் ஏற்பட்டது. அரசியல் குழப்பத்தின் பின்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கமும் இரண்டு மாதங்களில் எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் 2019ஆம் ஆண்டில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முடிவெடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்ற ரீதியில் அவர்களுக்கு 1,500 ரூபா அடி ப்படைச் சம்பளத்தை வழங்கினாலும் மகிழ்ச்சியடைவேன்.

பெருந்தோட்டத்துறை மக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. எமது ஆட்சிக்காலத்திலேயே பெருந்தோட்ட மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் அங்குள்ள மக்களுக்கு 7 பேர்ச் காணிகளை வழங்கி அவர்களுக்கு வீடுகளையும் கட்டிக்கொடுக்கின்றோம்.

இவ்வாறான நிலையில் அவர்களின் சம்பளப் பிரச்சினைக்கும் தீர்க்கமான முடிவொன்றை இம்மாத இறுதிக்குள் பெற்றுக் கொடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை