இடைக்கால கணக்கறிக்கை; சபை அங்கீகாரம்

96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஐ.ம.சு.மு புறக்கணிப்பு;

ஜே.வி.பி எதிராக வாக்களிப்பு

கல்வி- 30.5 பில்.ரூபா; சுகாதாரம் - 67 பில். ரூபா

பாதுகாப்பு -11.2 பில். ரூபா; பிரதமரின் கீழுள்ள

அமைச்சுகளுக்கு 30.9 பில்.ரூபா ஒதுக்கீடு

மகேஸ்வரன் பிரசாத்

2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை 96 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

2019ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவீனங்களை மேற்கொள்வதற்கான இந்த இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆளும் கட்சியில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களும், எதிர்க்கட்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்த நிலையில் ஜே.வி.பியினர் இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிராக வாக்களித்தார்கள்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றிருந்த நிலையில் 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான அரச செலவினங்களைப் பூர்த்திசெய்ய நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்தார். 1,765 பில்லியன் ரூபாவைக் கோரி அவர் இதனை முன்வைத்திருந்தார்.

நாட்டின் அவசர தேவை கருதி நிலையியற் கட்டளை இடைநிறுத்திவைக்கப்பட்டு இடைக்கால கணக்கறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டு நேற்றையதினமே நிறைவேற்றப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார். நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கித் தனது கருத்துக்களை முன்வைத்ததும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்றினார்.

இவர்களைத் தொடர்ந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர். எதிர்க்கட்சியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா மஹிந்த அமரவீர ஆகியோர் உரையாற்றும்போது, மக்கள் சார்பில் அரசாங்கம் எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் முன்நிபந்தனைகளின்றி ஆதரவு வழங்கத் தாம் தயாராக இருப்பதாகக் கூறினர்.

அது மாத்திரமன்றி அரசாங்கம் கடந்தகாலத்தில் இழைத்த தவறுகளை திருத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் திட்டங்களை உள்ளடக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மக்கள் சார்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவிருப்பதுடன், கஷ்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலான வேலைத்திட்டங்களை அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவிருப்பதுடன், தடைப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கும் நோக்கில் இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்படவில்லை, மாறாக திறைசேரியை நிரப்பி அதனூடாக தமது பொக்கட்டுக்களை நிரப்பும் நோக்கிலேயே இடைக்கால கணக்கறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க விமர்சித்தார். அது மாத்திரமன்றி நான்கு மாதங்களுக்காக ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் அதிகமாகவுள்ளது. ஒருவருக்கு மாத்திரம் ஏன் பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வியெழுப்பிய அவர், இடைக்கால கணக்கறிக்கையில் அதிகதொகை நிதியை ஒதுக்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது என்றும் விமர்சித்தார். இந்தக் காரணங்களால் இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும் கூறினார்.

விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜே.வி.பியினர் கோரிக்கைவிடுத்தனர். இதற்கமைய கோரம் மணி ஒலிக்கப்பட்டு இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். ஜே.வி.பியின் ஆறு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்ததுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் சமுகமளித்திருக்கவில்லை.

இடைக்கால கணக்கறிக்கைக்கு ஆதரவாக 102 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டது. 96 மேலதிக வாக்குகளால் 2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன், பாராளுமன்ற அமர்வுகள் 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இடைக்கால கணக்கறிக்ைக சமர்ப்பிப்பு

2019ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் செலவீனங்களை முன்னெடுக்க 1,765 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யும் இடைக்கால கணக்கறிக்கையை நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்க முடியாது போனது. இந்த நிலையில் அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரச செலவினங்களை முன்னெடுப்பதற்காக இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்பட்டது.

செலவினங்களை மேற்கொள்வதற்காக 791 பில்லியன் ரூபாவும், திரட்டுநிதியத்துக்கு 970 பில்லியன் ரூபாவும், திரட்டுநிதியத்தின் முற்பணங்களாக 5 பில்லியன் ரூபாவும் இந்த இடைக்கால கணக்கறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அரசாங்கத்தின் கடன் எல்லை 990 பில்லியன் ரூபாவை விஞ்ஞாத வகையில் இருக்கும்.

ஜனாதிபதி செயலகத்துக்கு 4.3 பில்லியன் ரூபாவும், பிரதமர் அலுவலகத்துக்கு 503 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி புத்தசாசன அமைச்சுக்கு 493 மில்லியன் ரூபாவும், நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சுக்கு 1.2 பில்லியன் ரூபாவும், தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, வாழ்க்கைத் தொழில் பயிற்சி, திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கு 30.9 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 11.2 பில்லியன் ரூபாவும், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கு 67 பில்லியன் ரூபாவும், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கு 11 பில்லியன் ரூபாவும், நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சுக்கு 71 பில்லியன் ரூபாவும், கல்வியமைச்சுக்கு 30.5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கு 2.5 பில்லியன் ரூபாவும், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கு 1.7 பில்லியன் ரூபாவும், கைத்தொழில் வாணிபம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 3.03 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சுக்கு 9.9பில்லியன் ரூபாவும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சுக்கு 2.5 பில்லியன் ரூபாவும், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கு 12 பில்லியன் ரூபாவும், பெருநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சுக்கு 15.1 பில்லியன் ரூபாவும், நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு 25 பில்லியன் ரூபாவும், துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சுக்கு 1.19 பில்லியன் ரூபாவும் தொழில், தொழிற்சங்க உறவுகள், சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன்புரி அமைச்சுக்கு 5.7 பில்லியன் ரூபாவும், தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 1.9 பில்லியன் ரூபாவும், திறன்அபிவிருத்தி, வெளிநாட்டு வர்த்தக, விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கு 2.7 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்,

மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நாம் தயாரித்து முடித்திருந்தோம். வரவுசெலவுத்திட்டத்தின் உரையை தயாரித்துக் கொண்டிருந்தபோதே சதி முயற்சியால் எமது அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. கடந்த 51 நாட்களில் சட்டரீதியான அரசாங்கம் இன்மையால் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. இவ்வாறான நிலையில் ஜனவரி மாதத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு அரசாங்கத்தின் செலவீனங்களை முன்னெடுப்பதற்கு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்க முடியாது போயிருந்தால் இலங்கை கிரேக்கம் மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளை விட மோசமான பொருளாதார நிலைக்குச் சென்றிருக்கும்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய சக்தியுடன் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு உறுதிமொழியெடுத்துள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு-செலவுத் திட்டத்தை ஜனவரி மாதம் முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதுடன். பெப்ரவரியில் விவாதத்தை நடத்தி அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதுவரை இந்த இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இடைக்கால கணக்கறிக்கை இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

Sat, 12/22/2018 - 06:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை