ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசு மக்கள் சார்ந்த அரசாக வேண்டும்

மகேஸ்வரன் பிரசாத்

மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசாங்கம் மக்கள் சார்ந்த அரசாங்கமாக இருக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ எம்.பி பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் சகல நிபந்தனைகளுக்கும் உடன்படாது, மக்கள் தொடர்பில் சிந்தித்து அரசாங்கம் செயற்பட வேண்டும்.

தாம் பலமான எதிர்க்கட்சியாக இருக்கும் வரையில் ஆளும் கட்சியினரின் ஆசனம் நிரந்தரமில்லை என்றும் அவர் கூறினார்.

2019ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

சகலவற்றுக்கும் வரிகளை அறவிட்டு மக்கள் நசுக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே அரசாங்கத்தைப் பொறுப்பேற்கவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டது.

எனினும், எந்தவித சூழ்ச்சியை மேற்கொண்டும் தாம் அரசாங்கத்தைக் கைப்பற்றவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் ஆட்சியை கையில் எடுத்தபோது தான் இந்த நாட்டின் கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் வர்த்தகத்துறைக்கு ஏற்பட்ட சேதம் என்னவென்பதை அறிந்துகொண்டோம். வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டமையால் சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புக்கள் இழக்கப்பட்டன. வரிச்சுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆட்சியை பொறுப்பேற்ற உடனேயே நிவாரணத்தை வழங்கினோம்.

நீங்கள் இப்போது மீண்டும் உங்களின் பயணத்தை ஆரம்பித்துள்ளீர்கள். ஆட்சியை கொண்டுசெல்ல வேண்டும் என்றால் முதலில் ஆட்சியாளர்கள் மக்கள் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

எமது நாட்டில் இந்த கால கட்டத்திலும் ஒருவேளை உணவை மாத்திரம் உண்டு வாழ்க்கையை நடத்தும் மக்கள் வாழ்கின்றனர் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒருவேளை உணவை உட்கொள்ளக் கூட முடியாதவர்கள் குறித்து அரசாங்கம் கரிசனை செலுத்தவேண்டும். சர்வதேச நாணய நிதியம் கூறிய அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, மக்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். வரிகளை பற்றி சிந்திக்க முன்னர் ஒரு வேளை மாத்திரம் உண்டு வாழும் மக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

Sat, 12/22/2018 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை