தெரிவுக்குழு தொடர்பில் சபாநாயகர் இன்று தீர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தது சட்ட விரோதமென தெரிவித்து அது தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஆளும் தரப்பும் த.தே.கூட்டமைப்பும் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (21) தமது முடிவை அறிவிக்க இருப்பதாக சபாநாயகர் அலுவலுகம் தெரிவித்தது.

இது தொடர்பில் ஐ.தே.க எழுத்துமூலம் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ள தாகவும் அறிய வருகிறது.

ஓக்டோபர் 26 ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்த நிலையில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஆளும் தரப்பாக செயற்பட்ட ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் அமர்ந்தனர்.

இந் நிலையில் பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை எம்.பிக்களை கொண்ட கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் இதனை நிராகரித்த ஆளும் தரப்பும் த.தே.கூட்டமைப்பும் இது தொடர்பில் விசாரணை நடத்த தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரை கோரியிருந்தன.இந் நிலையிலேயே சபாநாயகர் தமது தீர்ப்பை இன்று (21) அறிவிக்க இருக்கிறார்.பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடுகிறது.(பா)

Fri, 12/21/2018 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை