கால எல்லைக்குள் அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாத நிலை

நாட்டுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும் சிங்கப்பூர் ஒப்பந்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் தயாரித்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை, சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இந்தத் திகதியை நீடிக்கும் நோக்கில் அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரித்திருந்தேன்.  மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சர்களின் செயற்பாட்டுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருப்பதால் கால நீடிப்புக்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க முடியாமலிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நாட்டுக்குப் பாதிப்பாக அமையும் என்பதை நாம் தொடர்ச்சியாகக் கூறிவந்தோம். இது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி நிபுணர்கள் குழுவொன்றை அமைத்திருந்தார். இந்தக் குழு ஜனாதிபதியிடம் அறிக்கையைக் கையளித்துள்ளது. இது நாட்டுக்குப் பாதகமான விடயங்களை உள்ளடக்கியுள்ளது என அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிறுவனமான வர்த்தகத் திணைக்களத்தை இணைத்துக் கொள்ளாமல் சிங்கப்பூர் ஒப்பந்தத்தை முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தயாரித்து அதில் கைச்சாத்திட்டுள்ளார். இதனால் பாரிய பாதிப்புக்கள் நாட்டுக்கு ஏற்படலாம். எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது இது விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டிவந்தமையால் ஜனாதிபதி எனக்கே சர்வதேச வர்த்தக அமைச்சர் பதவியை வழங்கினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தேன். இரு நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அமைச்சர் ஒருவரால் இடைநிறுத்த முடியாது. குறித்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்வதாயின் 2019ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதிக்கு முன்னர் அதனைச் செய்ய வேண்டும். ஏற்கனவே சிங்கப்பூர் ஒப்பந்தத்துக்கு எதிராக 9 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மகேஸ்வரன் பிரசாத்

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை