ரணிலின் எம்.பி பதவியை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச வங்கிகளுக்கு காசோலை அச்சிடும் நிறுவனத்தில் பங்குதாரர்

கம்பனியொன்றில் பங்குதாரராக செயற்பட்டு இரண்டு அரச வங்கிகளுக்காக காசோலை அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து செயற்படத் தகுதியில்லை என்று அறிவிக்கும் குவோ வொரென்டோ ஆணையொன்றை வழங்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு முரணாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டுள்ளதால், அவருக்குப் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட தகுதி கிடையாது என அறிவிக்குமாறு கோரி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சர்மிளா ரோவினா ஜயவர்தன நேற்று இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசனாயக்க, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பன பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

லேக்ஹவுஸ் அச்சு மற்றும் வெளியீட்டு தனியார் நிறுவனத்தில் பிரதான பங்குதாரர்களில் ரணில் விக்கிரமசிங்க ஒன்பதாவது இடத்தில் இருப்பதோடு அந்த நிறுவனத்தின் 2014 முதல் 2018 வரையான வருடாந்த அறிக்கைகளின் மூலம் இது நிரூபணமாவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர இந்த நிறுவனத்தில் அதிக பங்குகளை அதாவது 38,964  பங்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளதோடு அது மொத்த பங்குகளில் 1.33 எனவும் எஞ்சிய 90 வீதமான பங்குகளை அவரின் உறவினர்கள் கொண்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேக்ஹவுஸ் அச்சு மற்றும் வெளி யீட்டு தனியார் நிறுவனம், மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பவற்றின் காசோலைகளை அச்சிட்டு வருகிறது. காசோலை அச்சிடுவதில் அவரின் உறவினர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

24 வருடங்களாக ஐ.தே.க தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்படும் ரணில் விக்கிரமசிங்க, அரச வங்கிகளில் காசோலை அச்சிடும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு காசோலை அச்சிட்டு வருவதன் காரணமாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் தகுதியை இழந்துள்ளதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

தகவலறியும் சட்டத்தின் கீழ் தமது சட்டத்தரணியூடாக கம்பனி பதிவாளர் நாயகம், கொழும்பு பங்குப்பரிமாற்றம்,மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேர்தல் திணைக்களம், என்பவற்றினூடாக ஆய்வு செய்து இந்தத் தகவல்களைத் திரட்டியதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 91(1) ஈ சரத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிலையில், அரச ஒப்பந்தங்களில் ஈடுபட பிரதிவாதியால் முடியாது.ராஜித சேனாரத்னவுக்கு எதிராக டிலான் பெரேரா தாக்கல் செய்த மனுவையடுத்து ராஜித சேனரத்ன எம்.பி பதவியை இழந்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் குடியரசின் சார்பாக பொது நிறுவனங்களுடன் முதலாவது பிரதிவாதி நிதி அக்கறையுடன் கூடிய ஒப்பந்தங்களை அவரது குடும்பத்துடன் இணைந்து தொடர்ந்து நடத்தி வருகிறார். லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிசர்ஸ் PLC என்ற நிறுவனத்தில் அவர் பிரதான பங்குதாரராக இருக்கிறார்.

பிரதமர் பதவியை வகித்து வரும் முதலாவது பிரதிவாதி லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிசர்ஸ் PLC என்ற நிறுவனத்தின் சில நிகழ்ச்சிகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார். அத்துடன் மேற்கூறிய கம்பனியின் சேவைகளை இலங்கையின் வங்கித் துறைக்கு வழங்கும் வகையில் தனது பதவியைப் பயன்படுத்தி ஊக்குவிப்பு வழங்கியுள்ளார்.

முதலாவது பிரதிவாதியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அதிகாரங்கள் தற்போது இயல்பு நிலையில் அவ்வாறான அதிகாரங்களை அவர் சட்ட விரோதமாகப் பயன்படுத்தி வருகிறார். எனவே, இந்த யாதுரிமைப் பேராணை மூலம் அவர் எந்த அதிகாரத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை வசிக்கிறார் என்பதை நான் இந்தப் பேராணையின் பிரகாரம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவது பிரதிவாதிக்கு பாராளுமன்றத்தில் அமரவும் வாக்களிக்கவும் எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், அவர் இவ்வாறு இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது முழு நாட்டுக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறான பாதிப்பு எவ்வித பரிகாரமும் இருக்காது.

பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறும் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு இடைக்கால உத்தரவு வழங்குமாறும் ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.(பா)

நமது நிருபர்

Wed, 12/12/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை