வேலைநிறுத்த போராட்டம் திடீரென எடுத்த முடிவல்ல

இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றது இ.தொ.கா

ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சினை;  

 

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் திடீரென எடுத்த முடிவு அல்லவென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி.நேற்று (09) தெரிவித்தார். இந்த விவகாரமாக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் நேற்று கொட்டகலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொழிலாளர்களும் சில தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிச்சயமாகப் போராட்டத்தில் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளதென்றும் கொட்டகலை சீ.எல்.எப் அலுவலகத் தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் என்ற குறிக்கோளிலிருந்து இ.தொ.கா மாறுப்படப் போவதில்லை. மாறாக எம்மிடம் கடைசியாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 600 ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், மேலதிக கொடுப்பனவுகள் இணைந்ததாக 925 ரூபாய் என்ற அடிப்படைக்கும் வந்தார்கள்.

இந்தத் தொகை தொழிலாளர்களுக்குப் போதுமான தொகையாக இல்லை. இதை அனைவரும் உணர்வார்கள். ஆகையினால், மேலும் எமது ஆயிரம் ரூபாய் இலக்கை நோக்கிய பயணத்திற்காக அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த பணிபகிஷ்கரிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 6 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் வேறு எந்த பிரச்சினைகளும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், கடந்த முறை ஒன்றரை வருடங்களாக அதாவது 18 மாதங்கள் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதன்போது வழங்கப்பட வேண்டிய நிலுவைப் பணம் அதிகம் என்பதனால் இதனை வழங்க மறுத்தனர். ஒக்டோபர் 26ஆம் திகதி ஒரு பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டு குழப்ப நிலை உருவாகியதால் அன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.

இருந்த போதிலும் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவு எல்லைக்கு வராததன் காரணமாகப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வரும் இந்த வேளையில், நாளை (இன்று) கொழும்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.,

இன்று தோட்டத் தொழிலில் ஈடுபடும் ஆண் தொழிலாளர்கள் வெளிமாவட்டங்களுக்குப் பணிக்கு ச் செல்வது தோட்டங்களில் குறைவான ஊதியம் கிடைப்பதனாலே. ஊதிய உயர்வை வழங்கும் பொழுது இவர்களும் தோட்ட தொழில்களில் தொடர்ந்தும் ஈடுப்பட்டு தோட்டங்களைப் பலமாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Mon, 12/10/2018 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை