மக்களுக்கு வழங்க இருந்த நிவாரணங்களுக்கு பாதிப்பு

இடைக்கால தடையினால்  

 

பிரதமர், அமைச்சரவை அதிகாரங்களில் இருந்தவர்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் நாட்டில் பொருளாதாரம் மட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வழங்கப்பட இருந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நிதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்‌ஷ,விவசாயிகளுக்கும்,சிறு மத்திய கைத்தொழிலாளர்கள்,நிர்மாணத் துறையினருக்கும் மேலும் சில துறையினருக்கும் நிவாரணம் வழங்க இருந்த போதும் ஐ.தே.க மேற்கொண்ட மேன்முறையீட்டினால் அமைச்சரவையில் பதவி வகித்தவர்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் மக்களுக்குக் கிடைக்க இருந்த நிவாரணங்கள் கிடைக்காமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.

பொரளை வஜிராராமயில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர்,

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரையும் அமைச்சரவையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.இதன் பிரகாரம் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இந்த நியமனங்களை ஐ.தே.கவும் அங்கீகரித்ததால் அதற்கு எதிராக வழக்கு தொடரவில்லை.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக சில கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததால் நாட்டின் பொருளாதாரம், சமூகம்.அரசியல் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சராக நான், நாட்டின் முன்னேற்றத்திற்காக பல யோசனைகளைச் சமர்ப்பித்திருந்தேன். சிங்கப்பூர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை பத்திரமொன்றையும் முன்வைத்திருந்தேன். நீதிமன்ற உத்தரவினால் இவை யாவும் தடைப்பட்டுள்ளன.

நாம் காபந்து அரசாங்கமொன்றையே செயற்படுத்தினோம். ஜனவரி 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தி மக்களுக்கு தேவையான அரசாங்கமொன்றை உருவாக்க சந்தர்ப்பம் வழங்க நடவடிக்கை எடுத்தோம். இவை யாவும் தடைப்பட்டன.

நாம் பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்கவில்லை. சபாநாயகரின் அரசியலமைப்பிற்கும் நிலையியற் கட்டளைகளுக்கும் முரணான செயற்பாடுகளைக் கண்டித்தே இந்தப் பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது. அரசியலமைப்பிற்கும் நிலையியற்கட்டளைகளுக்கும் உட்பட்டதாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால் பாராளுமன்றத்தை நிராகரிக்க மாட்டோம் என்றார். (பா)

Mon, 12/10/2018 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை