எவர் பிரதமரானாலும் எமக்கு ஆட்சேபனை இல்லை

ஒக்டோபர் 26ல் நடந்தது சதியாகவிருந்தாலும் அதற்கான பின்னணியை உருவாக்கியது நலலாட்சி அரசாங்கமே என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வேளை ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்குவது தமது நோக்கமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமர்ந்தாலும் ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் அதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. 26 ஆம் திகதி நடந்த சூழ்ச்சிக்கு எதிராகவே நாம் செயற்படுகி ன்றோம். தற்போதைய எமது செயற்பாடுகள் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்பதாக அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) இடம்பெற்ற பிரதமராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதற்கான நம்பிக்கைப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அநுர குமார திசாநாயக்க எம்.பி:-

2015 ஜனவரி 08 இல் நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தமது ஆணையை வழங்கினர். அதனை ஒரு விசேடமான தீர்ப்பாகக் குறிப்பிட முடியும். அந்த ஆணை ஒரு தனிக் கட்சிக்கன்றி பல கட்சிகளுக்குமான மக்கள் ஆணையாகும். எனினும் அதன் மூலம் மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்பதே கேள்விக்குறியாகும்.

நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை இல்லா தொழித்தல், படுகொலைகளை நிறுத்துதல், ஊழல் செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்தல் என நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கை களும் தட்டிக்கழிக்கப்பட்டன. தேசிய அரசாங்கமாக இருந்தபோதும் தனிக்கட்சி தீர்மானம் எடுத்ததால் மக்கள் எதிர்பார்ப்பு தட்டிக்கழிக்கப்பட்டது.

கடந்த மூன்றரை வருட கால செயற்பாடுகள் தொடர்பில் மங்கள சமரவீர சபையில் குறிப்பிட்டார். எனினும் அதில் செய்தவற்றை மட்டுமே அவர் தெரிவித்தாரேயன்றி செய்யத்த வறியதை அவர் அதில் உள்ளடக்கவில்லை.

அக்டோபர் 26 இல் இடம்பெற்ற சூழ்ச்சியின் போது மக்கள் இருந்த மனநிலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அது சட்டத்திற்கும் அரசியலமைப்பிற்கும் முரணான செயற்பாடு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும் அதற்கான பின்னணியை உருவாக்கி க் கொடுத்தது யார் என்பதையும் பார்க்க வேண்டும். அதற்கான சூழ்நிலையொன்று நாட்டில் உருவாக்கப்பட்டிருந்தது.

பிரதமர் பதவியில் மீண்டும் ரணில் விக்கிரம சிங்க அமரவேண்டும் என்பது ஜே.வி.பியின் எதிர்பார்ப்பல்ல. மஹிந்த ராஜபக்ஷவா – ரணிலா என்பது எமக்குப் பிரச்சினையல்ல. இருவரினதும் ஆட்சியைப் பார்த்தவர்கள் நாம். ரணில் விக்கிரமசிங்கவை பதவியில மர்த்துவது எமது நோக்கமல்ல, எனினும் சட்டத்திற்கு முரணாக சதி மூலம் ஆட்சியமைத்ததையே நாம் எதிர்க்கிறோம். அதற்கெதிரான சகல செயற்பாடுகளுக்கும் நாம் ஆதரவளிப்போம். பாராளுமன்றத்திலும் வெளியிலும் அதற்காக செயற்படுவோம்.

ஜனநாயகத்திற்குக் கௌரவமளிப்பவர்கள் என்ற வகையில் இத்தகைய மோசமான முன்மாதிரியை நாம் எதிர்க்கிறோம். அதனால் இதுபோன்ற செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளிவிடுவது அவசியம். அந்த சூழ்ச்சியைத் தோற்கடிப்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடு.

இலாபத்தை எதிர்பார்க்கும் அரசியல் கலாசாரமே நாட்டில் தற்போதுள்ளது. எவர் ஆசனத்தில் அமர்ந்தாலும் அமர்ந்த முதல் நிமிடத்திலிருந்தே பணம் சம்பாதிப்பது பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடுவர். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் அமர்ந்தால் அடுத்து வரும் வருடத்தில் நாட்டிற்கு நல்லது நடக்கும் என நாம் நினைக்கவில்லை. எவர் எமக்கு எத்தகைய லேபலைக் குத்தினாலும் சூழச்சியை தோற்கடிப்பதே எமது ஒரே நோக்கமாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை