சிரியாவின் முன்னாள் ஐ.எஸ் பகுதியில் ஏழு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிப்பு

முன்னர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பலம்கொண்டிருந்த பகுதியில் துன்புறுத்தப்பட்ட அடையாளங்களுடன் நூற்றுக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு சிரியாவின் அல்பு கமாலுக்கு அருகில் ஏழு மனித புதைகுழிகள் கண்டுபிக்கப்பட்டிருப்பதாக சானா செய்து நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுவரை 100க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஐ.எஸ் குழு சிரியா மற்றும் ஈராக்கில் பெரும் அட்டூழியங்கள் நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

பலரும் படுகொலை செய்யப்படும் முன்னர் துன்புறுத்தல் மற்றும் மோசமாக நடத்தப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வ அரச ஊடகமான சானா குறிப்பிட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும் இருப்பதாக சிரிய செம்பிறை சங்க அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். சிலர் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஈராக் நாட்டுடனான எல்லையில் உள்ள மாகாணமான டெயர் அல் சோரின் அல்பு கமாலில் இருந்து சிரிய படையினரால் கடந்த ஆண்டு ஐ.எஸ் குழு துரத்தப்பட்டது.

ஐ.எஸ் குழு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது அதன் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 10 மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். ஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த 98 வீதமான பகுதிகளில் இருந்து அந்தக் குழு வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் சிறிய அளவில் ஐ.எஸ் குழு தற்போது இயங்கி வருகிறது.

ஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அந்த குழு மேற்கொண்ட அட்டூழியங்கள் குறித்த ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ண உள்ளன.

ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு நகரான ரக்காவுக்கு அருகில் 500க்கும் அதிகமான சடலங்கள் கொண்ட பாரிய மனித புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.பி செய்தி நிறுவனம் கடந்த மாதம் செய்தி வெளியிட்டது.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை