சீனாவில் 2ஆவது கனடா நாட்டவரை காணவில்லை

சீனாவில் இரண்டாவது கனடா நாட்டவர் ஒருவர் காணாமல்போயிருப்பதாக கனடா வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவர் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக சீனாவில் கைது செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காணாமல் போயிருக்கும் வர்த்தகரான மைக்கல் ஸ்பாவோர், தாம் சீனாவில் விசாரணைக்கு முகம்கொடுத்ததாக கனடா அதிகாரிகளிடம் இந்த வாரம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரம் ஆரம்பத்தில் கனடா முன்னாள் இராஜதந்திரி ஒருவர் சீனாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாவியின் நிறைவேற்று அதிகாரி ஒருவரை அமெரிக்காவின் கோரிக்கையின் அடிப்படையில் கனடா கைது செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஹுவாவி தலைமை நிதி அதிகாரியான மெங் வன்சூவை நாடுகடத்த அமெரிக்கா கோரியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தடையை மீறியதாக மெங் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அவரை விடுதலை செய்யாவிட்டால் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

இந்நிலையில் மெங் கைது செய்யப்பட்டதன் பின்னரே சீனாவில் இரு கனடா நாட்டவர்கள் காணாமல்போயுள்ளனர்.

கைதாகி இருக்கும் முன்னாள் இராஜதந்திரி மைக்கல் கவ்ரிஜ் சீன தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக சீனா குறிப்பிட்டுள்ளது. எனினும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் தெரியவில்லை என்று கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை