நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாடுபட்டுள்ளது

இந்த நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாடுபட்டு இருக்கின்றது. அதன் மூலம் வெற்றியை பெற்றுத்தந்திருக்கின்றது என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு பிரதேச இந்துமாமன்ற கட்டடத்தில் நேற்றுமுன்தினம் (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் போராடி இருக்கின்றது. இதன் மூலம் வெற்றியும் அடைந்திருக்கின்றது. இதற்கு நன்றிக் கடனாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமைப்பாடு அரசுக்கு இருக்கின்றது.

அந்தவகையில் எதிர்வரும் இரண்டு வருடங்களில் வட,கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தி அடையும். அதிலும் குறிப்பாக அம்பாரை மாவட்டமும் கூடுதலான அபிவிருத்திகளைக்காணும். அதற்காக பிரதமர் அதிகளவான நிதியினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.

அவ்வாறு இல்லாமல் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என பிரதமர் நினைத்தால் அதற்கான தகுந்த பதிலடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்காலத்தில் வழங்கும்.

இதேவேளை இன்றைய காலகட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் கட்சியாக மாறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்துமாமன்றத்தின் தலைவர் கே.கனகரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் மன்றத்தின் முன்னாள் தலைவர் வே.சந்திரசேகரம் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆலய தலைவர்கள் சமய நிறுவனங்களின் பிரதிநிதிகள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Mon, 12/24/2018 - 11:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை