ஜனநாயகத்தை பாதுகாக்கும் கதவுகள் திறப்பு

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜனநாயகத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு ஜே.வி.பி தலைமைத்துவம் வழங்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து ஜனாதிபதி தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு நேற்று உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்புக்கு அமைய நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜே.வி.பியின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டிலுள்ள மக்களுக்கு அரசியலமைப்பு தொடர்பிலும் சட்டம் தொடர்பிலும் அக்கறை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஜனநாயகத்தை மதிப்பதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பானது ஜனநாயகத்தின் பாதுகாவலன் எனப் போலியாகத் தன்னைக் காண்பித்துக்கொள்ளும் ரணில் விக்ரமசிங்கவுக்கான வெற்றியல்ல. எனவே திறக்கப்பட்ட இந்தக் கதவைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஜனநயாகத்தைப் பாதுகாப்பது தொடர்பான விடயத்தைக் கொண்டு செல்லத் தலைமைத்துவம் வழங்கவுள்ளோம். எதிர்வரும் சனிக்கிழமை கிருலப்பிட்டிய பிரதேசத்தில் பாரிய மக்கள் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து ஏற்படுத்திய சதி முயற்சியை முறியடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் ஆரம்பம் முதல் இருந்தோம். பாராளுமன்றத்தில் அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதையும் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருந்தோம். ஆனால் ஜனாதிபதி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டார் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தோம். நீதிமன்றத் தீர்ப்புடன் அரசியலமைப்புக்கு உட்பட்டு ஜனாதிபதி நடக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஒக்டோபர் 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டத்தை முறியடிப்பதற்கே நாம் முன்னுரிமை கொடுத்திருந்தோம். தற்பொழுது கிடைத்திருக்கும் வெற்றி மக்களுக்கான வெற்றியாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். இது வரை நிறைவேற்று அதிகாரத்தில் இருந்தவர்களால் நாட்டுக்கு நல்லது நடக்கவில்லை என்றும் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

 

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை