ஜனாதிபதியுடன் பேசிய பின்னரே தீர்மானம்

தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா எதிர்க்கட்சியில் இருப்பதா என்பதை ஜனாதிபதியுடன் பாராளுமன்றக் குழு நடத்தவுள்ள தீர்மானத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என,பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், தேர்தலை நடத்தாமல் இருப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகமாகும். எனினும், நாம் எப்பொழுதும் தேர்தல்களை நடத்தியே ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். மக்களின் ஆணையின் ஊடாக ஸ்திரமான அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்பதையே நாம் கூறிவருகின்றோம்.

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு வழங்கிய கட்டளை அரசியலமைப்புக்கு ஏற்புடையது அல்ல என்ற வியாக்கியானத்தையே உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மக்களே இறுதி முடிவை எடுக்க வேண்டும். பாராளுமன்றத்தை வைத்திருப்பதா? எவ்வாறான பாராளுமன்றத்தை வைத்திருப்பது என்பதை அவர்களே முடிவுசெய்ய வேண்டும்.

புதிய பாராளுமன்றம் ஒன்று தேவை என்பதே எமது போராட்டமாகும். கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கமும் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியு ம் மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தன. செல்லுபடியற்ற பாராளுமன்றம் எந்தத் தீர்ப்பை முன்னெடுத்துச் சென்றாலும் அது ஏற்புடையது அல்ல. எப்படியாவது தேர்தலொன்றை நடத்த வேண்டியிருக்கும், இது இலகுவாக அமையாது ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கே உச்ச நீதிமன்றம் வியாக்கியானத்தை வழங்கியுள்ளது. தேர்தலை நடத்துவதற்காகவே நாம் காபந்து அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா, எதிர்க்கட்சியில் இருப்பதா என்பதை நாம் ஜனாதிபதியுடன், பாராளுமன்றக் குழுக்கூட்டத்தை நடத்தியே முடிவெடுப்போம்.

நமது நிருபர்

Fri, 12/14/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை