வளர்ந்து வரும் ஆசிய அணி; மீண்டும் சம்பியனானது இலங்கை

Azaff Mohamed
வளர்ந்து வரும் ஆசிய அணி; மீண்டும் சம்பியனானது இலங்கை-Emerging Team Asia Cup-SL Won the Tittle

- தொடர்ச்சியாக இரண்டாவது முறை சம்பியன்
- கமிந்து மெண்டிஸ்: போட்டியின் நாயகன், தொடரின் நாயகன்

வளர்ந்து  வரும் ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் வளர்ந்து வரும் இந்திய அணியை 3 ஓட்டங்களால் வெற்றி கொண்டதன் மூலம் சம்பியனாக முடி சூடிக்கொண்டது இலங்கை வளர்ந்து வரும் அணி.

ஆசிய கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபற்றும் இத்தொடர், கடந்த 07 ஆம் திகதி ஆரம்பமானது.

2013 இல் ஆரம்பமான இத்தொடரின் முதல் சம்பியனாக இந்தியா தெரிவானதோடு, அதனைத் தொடர்ந்து 2017 மற்றும் 2018 இல் இடம்பெற்ற தொடர்களில் இலங்கை வெற்றி கொண்டுள்ளதன் மூலம் தொடர்ந்து சம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை வளர்ந்து வரும் ஆசிய கிண்ண போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றன. குழு நிலைப்போட்டிகளில் முதல் 4 இடங்களைப்பிடித்த இலங்கை, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடாத்தின.

பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியும் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியும் இன்று (15) இறுதிப்போட்டியில் மோதின.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகிய போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

தொடர் முழுவதும் சகல துறைகளிலும் பிரகாசித்த இலங்கை வளர்ந்து வரும் அணி இன்றைய இறுதிப்போட்டியில் சிறப்பான துடுப்பாட்டம் மூலம் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணியின் முதல் விக்கெட் முதல் ஓவரிலேயே வீழ்ந்த போதிலும் பின்னர் ஜோடி சேர்ந்த ஹசித பொயேகொட மற்றும் அவிஷ்க பெர்ணான்டோ இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை எந்த வித பின்னடைவும் இன்றி உயர்த்தினர். அரைச்சதம் கடந்த ஹசித 54 ஓட்டங்களுடனும் அவிஷ்க 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் களம் கண்ட செஹான் ஜயசூரிய 46 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்ததுடன் தொடர் முழுவதும் பந்து வீச்சு, துடுப்பாட்டம் என சகல துறைகளிலும் அசத்திய கமிந்து மெண்டிஸ் இப்போட்டியிலும் அசத்தலாக ஆடி 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க்இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்களை குவித்தது.

பந்து வீச்சில் அன்கிட் ராஜ்புட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் சம்ஸ் முலானி, மார்கண்டே, யாதவ் மற்றும் நிடிஷ் ராணா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய வளர்ந்து வரும் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. சீரான இடைவெளியில் இலங்கை அணி விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தமது முயற்சியில் சற்றும் தளரவில்லை. சிறப்பாக ஆடி ஓட்டங்களை இலகுவாக குவித்த இந்திய அணித்தலைவர் ஜயந்த் யாதவ் மற்றும் நிடிஷ் ராணா ஆகியோரை அசேல குணரத்ன வீழ்த்தியதுடன் போட்டி இலங்கை அணியின் பக்கம் திரும்பியது. எனினும் 49ஆவது ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்படி இறுதி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 19 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இறுதி ஓவரை வீச கமிந்து மெண்டிஸ் அழைக்கப்பட்டார்.

மெண்டிஸ் வீசிய முதல் பந்தில் எவ்வித ஓட்டமும் பெறப்படாத போதிலும் 2ஆம் 4ஆம் பந்துகளில் இந்திய துடுப்பாட்ட வீரர் அன்டிட் சேத் இரு 6 ஓட்டங்களை விளாச போட்டி விறுவிறுப்பின் உச்சத்தை எட்டியது. எனினும் சிறப்பாக செயற்பட்ட மெண்டிஸ் அடுத்த இரு பந்துகளுக்கும் 4 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுக்க இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஜயந்த் யாதவ் 71 ஓட்டங்களையும் சம்ஸ் முலானி 46 ஓட்டங்களையும் பெற்றதோடு நிடிஷ் ரானா 40 ஓட்டங்களையும் பெற்றார்.

பந்து வீச்சில் அசேல குணரத்ன 3 விக்கெட்டுகளையும் செஹான் ஜயசூரிய மற்றும் லசித் அம்புல்தெனிய தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய கமிந்து மெண்டிஸ் மொத்தமாக 310 ஓட்டங்களைக் குவித்தோடு 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை வளர்ந்து வரும் அணி 270/7 (50)
கமிந்து மென்டிஸ் 61(55)
ஹசித பொயேகொட 54(62)
செஹான் ஜயசூரிய 46(56)

அன்கிட் ராஜ்புட் 2/61 (10)
சம்ஸ் முலானி 1/40 (7)
மயங்க் மார்கண்டே 1/47 (10)
ஜயன்ட் யாதவ் 1/37 (10)
நிடிஷ் ரானா 1/30 (6)

இந்தியா வளர்ந்து வரும் அணி 267/9 (50)
ஜயந்த் யாதவ் 71 (85)
சம்ஸ் முலானி 46 (44)
நிடிஷ் ரானா 40 (48)

அசேல குணரத்ன 3/38 (7)
செஹான் ஜயசூரிய 2/40 (10)
லசித் அம்புல்தெனிய 2/37 (10)
செஹான் மதுசங்க 1/21 (4)

Sat, 12/15/2018 - 19:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை