3rd T20:BANvWI; T20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள்

சுற்றுலா மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ரீ 20 போட்டியை 50 ஓட்டங்களால் வெற்றி கொண்டதன் மூலம் தொடரை 2-1 எனும் அடிப்படையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி கைப்பற்றியது. ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்த நிலையில் ரீ 20 தொடரையாவது கைப்பற்றி ஆறுதல் வெற்றிகளை பெற வேண்டிய நிலையில் மேற்கிந்தியத்தீவுகள் அணி போட்டிகளை எதிர்கொண்டது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்டி ரீ 20 தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக மூன்றாவது இன்று இடம்பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி ஏவின் லூயிஸின் அதிரடியின் உதவியுடன் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய லூயிஸ் 89 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சகிப் அல் ஹசன், முஸ்தாபிஷுர் ரஹ்மான் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 191 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி கீமோ போலின் அபாரமான பந்து வீச்சினால் 17 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத்தழுவியது.

பங்களாதேஷ் சார்பாக லிடன் தாஸ் மாத்திரம் அதிகபட்சமாக 43 ஓட்டங்களைப் பெற்றிருந்த போதிலும் ஏனைய முன்கள மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்த ஏமாற்றமளித்தனர். பந்து வீச்சில் கீமோ போல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் பேபியன் அலன் 2 விக்கெட்டுகளையும் ப்ரத்வைட் மற்றும் கோட்ரெல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஏவின் லூயிஸ் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் சிறப்பாட்டக்காரராக சகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.

மேற்கிந்தியத்தீவுகள் 190/10 (19.2) ஏவின் லூயிஸ் 89 (36) நிகோலஸ் பூரான் 29 (24) சகிப் அல் ஹசன் 3/37 (4) முஸ்தாபிஷுர் ரஹ்மான் 3/33 (4) மஹ்முதுல்லா 3/18 (3.2) பங்களாதேஷ் 140/10 (17) லிடன் தாஸ் 43(25) கீமோ போல் 5/15 (4) பேபியன் அலன் 2/19 (4) கொட்ரேல் 1/31 (4) ப்ரத்வைட் 1/15 (2)

   அஸாப் மொஹமட்

Sun, 12/23/2018 - 16:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை