இலங்கை-நியூசிலாந்து 2வது டெஸ்ட் இன்று

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி அதில் முதற்கட்டமாக நியூசிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

கடந்த 19ஆம் திகதி இடம்பெற்று முடிந்த இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்ததை அடுத்து, தொடரினை தீர்மானிக்கும் இரண்டாவதும் இறுதியுமான ஆட்டம் இன்று புதன்கிழமை (26) கிறிஸ்ட்ச்சேர்ச் நகரில் தொடங்குகின்றது.

வெலிங்டன் நகரில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டில் நடைபெற முடியாத விடயங்கள் பல நடந்திருந்ததோடு, எதிர்பார்க்க முடியாத போட்டி முடிவும் கிடைத்திருந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் டொம் லேத்தம் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அபார இரட்டைச் சதத்தின் (268*) உதவியோடு நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இலங்கையினை விட இமாலய முன்னிலை (296) ஒன்றினை பெற்றுக் கொண்டது.

இந்த முன்னிலையினை தாண்டி சவாலான வெற்றி இலக்கு ஒன்றினை எதிரணிக்கு நிர்ணயிக்கும் நோக்கோடு போட்டியின் மூன்றாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணியினர் அதே நாளிலேயே வெறும் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்த காரணத்தினால் நியூசிலாந்து வீரர்களே முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் சதங்கள் விளாசி தங்களது விக்கெட்டுக்களை பறிகொடுக்காமல் போட்டியின் நான்காம், ஐந்தாம் நாட்களில் அபார இணைப்பாட்டம் (274) ஒன்றினை உருவாக்க யாரும் எதிர்பாராத விதத்தில் முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்தது.

குறித்த இணைப்பாட்டம் மற்றும் அந்த இணைப்பாட்டத்தோடு இன்னிங்ஸ் தோல்வியை தழுவ இருந்த போட்டியை சமநிலை செய்தது என்பன எப்படியான சவால்களையும் இனி வரும் காலங்களில் இலங்கை வீரர்கள் சமாளிக்க முடியும் என்பதனை அனைவருக்கும் தெளிவாகவே சுட்டிக் காட்டியிருந்தது.

இப்படியாக குறித்த போட்டியில் பெற்ற ஒரு தன்னம்பிக்கையுடன் இலங்கை அணி நியூசிலாந்து அணியினை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கின்றது.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரினை நியூசிலாந்து 2--0 என கைப்பற்றுமிடத்து அவர்களுக்கு ஐ.சி.சி. இன் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு செல்வதற்கான ஒரு வாய்ப்பு ஏற்கனவே காணப்பட்டிருந்தது.

ஆனால், முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைய குறித்த இலக்கினை அடைவது நியூசிலாந்து அணிக்கு இயலாமல் போயிருந்தது. அந்த இலக்கினை அடையாது போனாலும் கிறிஸ்மஸின் அடுத்த நாளான “ பொக்ஸிங் டே (Boxing Day)” இல் ஆரம்பமாகும் இலங்கை அணியுடனான இரண்டாவதும் இறுதியுமான இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரினை வெல்வதே நியூசிலாந்து அணியின் அடுத்த இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமுனையில் இந்த ஆண்டில் இரு அணிகளும் விளையாடவுள்ள இறுதி சர்வதேச ஆட்டமாக அமைகின்ற இந்த டெஸ்ட் போட்டி, இளம் வீரர்களை அதிகமாக கொண்டுள்ள இலங்கை அணிக்கு திறமையினை வெளிக்காட்ட மற்றுமொரு சந்தர்ப்பமாகும்.

இலங்கை வீரர்கள் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அணியுடன் அண்மையில் டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்யப்பட்ட போது கிடைத்த வடுக்களை ஆற்றிக் கொள்வதுடன், கடந்த 12 ஆண்டுகளில் நியூசிலாந்து மண்ணில் தமக்கு கிடைக்காமல் இருக்கும் டெஸ்ட் வெற்றியினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை அணி

நியூசிலாந்து பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களினையே கொண்டிருப்பதனால், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஒரு சுழல் வீரர் மாத்திரமே கடந்த போட்டியில் இலங்கை அணிக்காக களமிறக்கப்பட்டிருந்தனர். இதில் கடந்த டெஸ்ட் போட்டியில் ஆடிய வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித எதிர்பார்த்த ஆட்டத்தினை வழங்கத் தவறியதனால் அவரின் இடத்தினை நுவான் பிரதீப் அல்லது துஷ்மந்த சமீர ஆகியோர் இந்த டெஸ்ட் போட்டியில் எடுக்க எதிர்பார்க்க முடியும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கை டெஸ்ட் அணிக்கு உள்வாங்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக்கவும் சிறப்பாக செயற்பட தவறியிருப்பதால் அவருக்கு பதிலாக அனுபவ வீரர் லஹிரு திரிமான்னாவோ அல்லது சதீர சமரவிக்ரமவோ நியூசிலாந்து அணியுடனான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இலங்கை முதல் பதினொருவர் குழாத்தில் உள்வாங்கப்பட முடியும்.

இதுதவிர இலங்கை அணியில் வேறு எந்த மாற்றங்களும் இடம்பெற வாய்ப்புக்கள் இல்லை.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி: திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க, தனன்ஞய டி சில்வா, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார.

நியூசிலாந்து அணி :

உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான ட்ரென்ட் போல்ட், டிம் செளத்தி மற்றும் நெய்ல் வேக்னர் ஆகிய மூவரினையும் நியூசிலாந்து அணி கொண்டிருக்கின்றது. எனினும், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொடர்ச்சியான வேலைப்பளுவினால் இலங்கை அணியுடனான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இம் மூவரில் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்படலாம் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனை மறுக்கும் விதமாக நியூசிலாந்து அணியின் பிரதான பயிற்சியாளர் கேரி ஸ்டேட் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதுப்பொலிவுடன் வருவார்கள் என தெரிவித்துள்ளார். இதனால், புதன்கிழமை இடம்பெறப் போகும் இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் முதல் பதினொருவர் குழாத்தில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் நியூசிலாந்து அணி :

ஜீட் ராவல், டொம் லேத்தம், கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பி.ஜே. வட்லிங், கொலின் டி கிரான்ட்ஹொமே, டிம் செளத்தி, நெய்ல் வேக்னர், அஜாஸ் பட்டேல், ட்ரென்ட் போல்ட்

Wed, 12/26/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை