கலபபடயன மஸக பயணம நறததம: ரஷயவல பதறறம தணவ

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை நோக்கி முன்னேறும் தமது படைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கும் வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கனி ப்ரிகோசின், பெலாரஸ் நாட்டுக்கு வெளியேறிச் செல்ல இணங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆட்சி கடந்த தசாப்தங்களில் சந்தித்த பெரும் சவால் முடிவுக்கு வந்துள்ளது.

ரஷ்ய தலைநகரில் இருந்து தமது கூலிப்படை 200 கிலோமீற்றர் தொலைவில் இருந்தபோதே கடந்த சனிக்கிழமை (24) ப்ரிகோசின் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

“வாக்னர் இராணுவ நிறுவனத்தை கலைக்க அவர்கள் விரும்புகிறார். நாம் ஜூன் 23ஆம் திகதி நீதிக்கான நடைப்பயணத்தை ஆரம்பித்தோம். இரத்தம் சிந்தக் கூடிய தருணம் இப்போது வந்துள்ளது” என்று ப்ரிகோசின் வெளியிட்ட ஓடியோ பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு பக்கம் ரஷ்யர்களின் இரத்தம் சிந்தப்படுவதை புரிந்துகொண்டு எமது பயணத்தில் இருந்து திரும்பி திட்டமிட்டபடி கள முகாம்களுக்குச் செல்கிறோம்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் கூலிப்படையினர் தலைநகரை நோக்கி வருவதையொட்டி நகரின் தெற்கு முனையில் இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. சிவப்பு சதுக்கம் மூடப்பட்டதோடு வாகனங்கள் சில வீதிகளை தவிர்க்கும்படி நகர மேயர் அறிவித்திருந்தார்.

தனியார் இராணுவம் ஒன்றான வாக்னர் குழு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போரிட்டு வருகிறது. எனினும் போரை எப்படி நடத்துவது என்பது குறித்து அந்தக் கூலிப்படையுடன் முரண்பாடு வெடித்ததோடு, ரஷ்ய இராணுவத் தலைமையை ப்ரிகோசின் விமர்சித்து வந்தார்.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னைச் சந்திக்காவிட்டால் மொஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாக வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோசின் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்நிலையில் வாக்னர் படை உக்ரைனில் உள்ள தனது கள முகாம்களில் இருந்து வெளியேறி எல்லையைத் தாண்டி தெற்கு நகரான ரொஸ்டோவ் ஒன் டொன்னுக்கு நுழைந்ததை அடுத்தே பதற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து மொஸ்கோவை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள வொரோனெஸ் நகரில் இருக்கும் பிராந்திய இராணுவ கட்டளையகம் மற்றும் இராணுவ வசதிகளை கூலிப்படையினர் கைப்பற்றினர்.

மொஸ்கோவை நோக்கிய பயணத்தில் மோதல் வெடித்ததை அடுத்து ரஷ்யா தனது பாதுகாப்பை பலப்படுத்தியது. தலைநகரில் உள்ள மக்கள் பயணங்களை தவிர்க்கும்படி அந்த நகர மேயர் அறிவுறுத்தியிருந்தார்.

ரஷ்யாவுக்கு துரோகம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று புட்டின் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை, பெலாரஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகசென்கோ, வாக்னர் தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து எட்டப்பட்ட உடன்படிக்கை பதற்றத்தை தணித்துள்ளது.

வாக்னர் குழுவின் முன்னேற்றத்தை நிறுத்தும் லுகசென்கோவின் கோரிக்கையை ப்ரிகோசின் ஏற்றுள்ளார். மேலும் பதற்றத்தை மேலும் தணிக்கும் வகையில் முன்மொழியப்பட்டிருக்கும் தீர்வில், வாக்னர் துருப்புகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக லுகசென்கோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி வாக்னர் தலைவர் ப்ரிகோசின் அண்டை நாடான பெலாரஸுக்கு செல்லவிருப்பதோடு அவருக்கு எதிரான குற்றவியல் வழக்கும் நிறுத்தப்படும் என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

புட்டினுக்கு மிகவும் நெருக்கமான, அவருக்கு விசுவாசமான சகாவாக வலம் வந்த ப்ரிகோசின், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் சமையல் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் ‘புட்டினின் சமையல்காரர்’ என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் உக்ரைன் போர்க் களத்தில் ரஷ்ய இராணுவத்தின் பின்னடைவுக்கும், அதிக உயிரிழப்புகளுக்கும் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவே காரணம் என்று ப்ரிகோசின் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார்.

Mon, 06/26/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை