ஒஸ்காரில் ஆசிய நடிகைக்கு முதல்முறை 'சிறந்த' விருது

தமிழ்நாட்டு ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர் விருது

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95ஆவது ஒஸ்கார் விருது விழாவில் முதல் ஆசிய பெண்ணாக சிறந்த நடிகைக்கான விருதை மிஷெல் இயோ வென்றார்.

'எவ்ரிதிங் எவ்ரிவெயார் ஓல் அட் வன்ஸ்' திரைப்படத்திற்காகவே அவர் இந்த விருதை வென்றார். இம்முறை ஒஸ்காரில் இந்தத் திரைப்படம் சிறந்த படம், இயக்குநர் மற்றும் திரைக்கதை என மொத்த ஏழு விருதுகளை வென்றது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஹொலிவுட் திரையுலகுக்கு திரும்பிய பிரண்டன் பிரேசர் சிறந்த நடிகர் விருதை தட்டிச் சென்றார். அவர் நடித்த 'தி வேல்' என்ற திரைப்படத்திற்காகவே விருது கிடைத்தது.

ஜோர்ஜ் ஒப் தி ஜங்கில் மற்றும் தி மம்மி போன்ற திரைப்படங்களில் நடித்து ஹொலிவுட் நட்சத்திரமாக வலம்வந்த பிரேசர், அண்மைக்காலத்தில் தனது நட்சத்திர அந்தஸ்த்தை தக்கவைக்க முடியாமல் சிறு சிறு வேடங்களிலேயே நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று இம்முறை ஒஸ்கார் விருதில் ஆசியாவுக்கு அதிக விருதுகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிறந்த பாடல் பிரிவில் இந்தியாவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஒஸ்கர் விருது கிடைத்துள்ளது. கீரவாணி இசையில் சந்திரபோஸ் வரிகளில் உருவான இந்தப் பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட 'தி எலிபென்ட் விஸ்பர்ஸ்' என்ற ஆவணப்படம், சிறந்த சிறிய ஆவணப்படத்திற்கான விருதை வென்றது.

இந்தப் பிரிவில் வெற்றிபெற்ற முதல் இந்திய ஆவணப்படம் இதுவாகும்.

தமிழ்நாட்டின் முதுமலைப் புலிகள் பாதுகாப்புப் பகுதியில் ஆதரவற்ற 2 யானைக்குட்டிகளைத் தத்தெடுத்து வளர்க்கும் குடும்பத்தைப் பற்றியதாக இந்த ஆவணப் படம் இருந்தது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை, எவ்ரிதிங் எவ்ரிவெயார் ஓல் அட் வன்ஸ் திரைப்படத்தில் நடித்த வியட்நாமியர் கெ ஹுய் சுவான் தட்டிச் சென்றார். அதே திரைப்படத்தில் நடித்த ஜேமி லீ கர்ட்டிஸ் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.

Tue, 03/14/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை