இன்று கோட்டாபயவை போ என்பவர்கள் நாளை உங்களையும்...!

பாராளுமன்றத்தில் நாமல் ராஜபக்‌ஷ எச்சரிக்கை

இன்று கோட்டாபயவை போ என்று சொல்கிறார்கள் நாளை நீங்களோ நானோ ஆட்சிக்கு வந்தாலும் அதே நிலை தான் ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை வரலாற்றில் ஜனநாயக ரீதியிலான அரசியல் மாற்றமே இதுவரை ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஆட்சியை மாற்ற வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.  ஆனால் நாட்டில் நடக்கும் அனைத்து ஆர்ப்பாட்டங்களின் பின்னணியிலும் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்பது உண்மையாகும்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாது. அதை அனைவரும் மறக்கவேண்டாம். சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போ என்று சொல்கிறார்கள். பிரதமரை போ என்று சொல்கிறார்கள். இப்பொழுது #gohomegota என்னும் ஹேஸ் டேக் நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றை மறவாதீர்கள், இன்று கோட்டாபய போ என்கிறார்கள். நாளை நீங்களோ நானோ யார் ஆட்சியமைத்தாலோ இதுதான் நடக்கும். இப்பிரச்சினை இன்றோ நாளையோ தீராது. இதனை நாங்கள் ஒன்றிணைந்தே தீர்க்க வேண்டும். இந்த பாராளுமன்றத்தில் என்னை விட அரசியல் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கின்றார்கள். நான் அரசியலுக்கு வந்து குறுகிய காலமே ஆகிறது. எனவே நாம் ஒன்றிணைந்து இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழிகளை தேட வேண்டும் என்றார்.

இதேவேளை, உலகத்தில் ஏனைய நாடுகளில் அரசாங்கம் ஜனநாயக ரீதியிலேயே மாறியிருக்கின்றன. வன்முறையால் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Wed, 04/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை