நவீன ஏவுகணையை சோதித்து எதிரிகளை எச்சரித்தார் புட்டின்

அதிநவீன அணு ஆயுத ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்த நிலையில் இது ரஷ்யாவின் எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வடமேற்கில் உள்ள பிலெசெஸ்க் நகரில் இருந்து வீசப்பட்ட இந்த ஏவுகணை தூரக் கிழக்கில் கம்சட்கா தீபகற்பத்தில் விழுந்ததாக தொலைக்காட்சியில் தோன்றிய புட்டின் கூறினார்.

“இந்த புதிய ஏவுகணை உச்ச மூலோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகளைக் கொண்டிருப்பதோடு இது அனைத்து நவீன ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பையும் முறியடிக்கும் திறன் கொண்டது. இதற்கு உலகில் எந்த ஒப்புவமையும் இல்லை. நீண்ட காலத்துக்கு அதனை எட்ட முடியாது” என்று புட்டின் தெரிவித்தார்.

சோதிக்கப்பட்ட சர்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றில் 10 அல்லது அதற்கு மேல் ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும் என்று அமெரிக்க கொங்கிரஸ் ஆய்வு சேவை தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்ட நிலையில் இதன் சோதனை மேற்கத்திய நாடுகளை ஆச்சரியப்படுத்தவில்லை என்றபோதும், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பதற்ற சூழலுக்கு மத்தியிலேயே இது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 04/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை